பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

உடையணிந்த அதிசய மனிதர்கள் எங்கிருந்தோ வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனே, ஹைட்டிக்கு வட மேற்கேயுள்ள பிரதேசத்தில் உள்ள குவாக்க நாகரி என்ற தலைவன் ஓர் ஆள் அனுப்பினான். அந்தத் தூதன் வெள்ளையர்களைத் தங்கள் தலைவன் வரவேற்க விரும்புவதாகத் தெரிவித்தான். குவாக்க நாகரி ஆளும் பகுதியில் நிறையத் தங்கம் கிடைக்கும் என்று வேறு சொன்னார்கள். கொலம்பஸ் தாமதிக்கவில்லை. டிசம்பர் 24-ஆம் நாள் பொழுது புலரு முன்பாகவே அக்குல் வளைகுடாவை விட்டு இரண்டு கப்பல்களும் புறப்பட்டன. குவாக்க நாகரியின் அரண்மனையில் கிறிஸ்துமஸ் விழாவை இன்பமாகக் கொண்டாடலாம் என்று மாலுமிகள் ஆனந்தங் கொண்டார்கள். தலைவன் குவாக்க நாகரியே ஜப்பானியச் சக்கரவர்த்தியாக இருக்கக்கூடும் என்று கூட எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அவர்களுக்கு இன்பத் திருநாளாக இல்லை. துக்க தினமாகவே முடிந்தது. அக்குல் வளைகுடாவிலிருந்து சில மைல் தூரத்திலேயேயுள்ள காரகோல் வளைகுடாவை அடைவது மிகக் கஷ்டமாயிருந்தது. ஒருநாள் முழுதும் கலம் செலுத்தியும் துறைமுகத்தையடைய முடியவில்லை. முதல் நாள் இரவு ஹைட்டி மக்கள் கொடுத்த விருந்திலும் அவர்கள் ஆட்டபாட்டங்களைக் கண்டதிலும் எல்லோருக்கும் தூக்கம் கெட்டிருந்தது. ஆகவே மறுநாள் எல்லோரும் அசந்து போயிருந்தார்கள். ஆகவே அன்று இரவு 11 மணிக்குமேல் கடல் அமைதியடைந்து விட்டபடியாலும் வேகமான காற்று இல்லாதபடியாலும் சாண்டா மாரியா கப்பலில் எல்லோரும் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள். சுக்கான் பிடிக்கிறவனும் ஒரு பையன் கையில் சுக்கானைக் கொடுத்துவிட்டுத் தூங்கப் போய்விட்டான். பையனுக்கு என்ன தெரியும். பாவம். அவன் பாடு சுக்கானைப் பிடித்துக் கொண்டு நின்றான். கப்பல் எந்தப் பக்கம் திரும்பினாலும்