பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

தான். அந்தப் பகுதி முழுவதையும் ஆராய்ந்து தங்கம் கிடைக்கும் இடத்தைக் கண்டு பிடிக்கும்படியும் அந்தப் பழங் குடிமக்களிடம் அன்பாக நடந்து கொள்ளும்படியும் கொலம்பஸ் அவர்களுக்கு அறிவுரை கூறினான். இஸ்பானியோலா என்ற அந்தப் பகுதி ஜப்பானாக இல்லா விட்டாலும், இந்திய நாடுகளின் ஒரு பகுதிதான் என்று அப்போதும் கொலம்பஸ் திண்ணமாக நம்பினான். எப்படியோ பொன் வளம் நிறைந்த ஒரு புத்துலகைக் கண்டு பிடித்துவிட்டோம் என்ற மனநிறைவோடு அவன் 1493-ஆம் ஆண்டுப் பிறப்பன்று புறப்பட ஆயத்தமானான். அன்று குவாக்க நாகரி பிரிவுபசார விருந்து ஒன்று நடத்தினான். அன்புரைகள் பரிமாறிக் கொண்ட பின் நைனாக் கப்பலில் அவன் தாய் நாடு நோக்கிப் புறப்பட்டான். பிண்டாக் கப்பல் சென்ற வழி தெரியவில்லை. ஆகவே, மூன்று கப்பல்களுடன் வந்த அவன், ஒன்றை இழந்து, ஒன்றை வேறு எங்கோ விட்டு விட்டு, ஒன்றை மட்டும் கொண்டு திரும்ப நேர்ந்தது.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின் வழியில் பிண்டா கப்பல் வேறொரு திசையில் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். அதுவும் தாய் நாடு நோக்கித்தான் திரும்பிக் கொண்டிருந்தது. ஒன்றையொன்று நெருங்கியவுடன் கப்பல் தலைவன் அலோன் சோபின்சோன் நைனாவுக்கு வந்து சேர்ந்தான். அலோன்சோ கூறிய விபரங்களிலிருந்து அவனும் இஸ்பானியோலா பகுதியில் சியோ என்ற இடத்தில் தங்கம் நிறைய இருப்பதைக் கண்டு பிடித்ததாகத் தெரிந்தது. தலைமைக் கப்பல் உடைந்த செய்தியை சிவப்பு இந்தியர்களிடையே பரவிய வதந்தியின் மூலம் அறிந்ததாகக் கூறினான் அலோன்சோ. நடந்ததைப் பற்றி இனிக் கவலைப்பட்டுப் பயனில்லை என்று கருதினான் கொலம்பஸ்.