பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

அவனைப் பல வியாபாரப் பொருள்களுடன் இறக்கிவிட்டுத் தன் ஊருக்கு செல்லவிடுத்தான்.

இந்தச் செயலினால் அவன் எதிர்பார்த்தது நடந்தது. பல இந்தியர்கள் தங்கள் பயத்தை யெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுக் கப்பல்களுக்கு வந்தனர். நல்ல வியாபாரம் நடந்தது. சாந்தா குரூசில் கரீபியர்களால் காயப்படுத்தப்பட்ட மாலுமி, பின்னால் இறந்துபோனான். அவனுடைய உடல் இங்கே ஒரு கிறிஸ்தவனுக்குரிய கிரியைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தனக்கு ஏற்கனவே பழக்கமான பகுதிகளுக்கு வந்தவுடன், கொலம்பஸ், நாவிடாடிலுள்ள தன் ஆட்களுடன் தொடர்புகொள்ள ஆவல் கொண்டான். இருந்தாலும் புதிதாகக் குடியேற்றம் செய்வதற்குத் தகுந்த இடத்தைக் கண்டு பிடிக்கவேண்டிய வேலையிருந்ததால் உடனடியாக அவன் நாவிடாடுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், நாவிடாடில் தான் விட்டுவந்த ஸ்பானியர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை ஒருவாறாகச் சொல்வது போல் ஒரு குறிப்புக் கிடைத்தது. மாண்டிகிரிஸ்டி என்ற இடத்தில் கரையோரத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பிணங்களைக் கரைக்குச் சென்றுவந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். சிவப்பு இந்தியர்கள் தாடி வளர்ப்பதே கிடையாது. அந்தப் பிணங்களுக்கு தாடியிருந்தது. ஆகவே அவை ஸ்பானியப் பிணங்களாக இருக்கக்கூடும் என்று அனுமானிக்க இடமிருந்தது.

இந்த அனுமானம் சரிதானென்று சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. நவம்பர் மாதம் 27-ம் நாள் காரகோல் வளைகுடாவைச் சேர்ந்த ஹைட்டியன் முனைத் துறைமுகத்தையடைந்தது.