பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

டாக்டர் சங்கா முதலில் ஒரு நாய்க்கும் கொடுத்துப் பரிசோதிப்பார். அதன் பிறகுதான் மனிதர்களைச் சாப்பிட அனுமதிப்பார். அப்படியிருந்தும், உணவு ஒத்துக் கொள்ளாமல் வயிற்றுக் கோளாற்றுக்கு ஆளானவர்கள் பலர். பெரும் பகுதி ஆட்கள் நோயுற்றுப் படுத்த படுக்கையாகி விட்டபடியால், சொந்தச் செலவில் வந்திருந்த சில செல்வந்தர்களையும் உடலுழைப்புச் செய்யும்படி கட்டாயப் படுத்தினான் கொலம்பஸ். அவர்கள் தங்கம் தேடி வந்திருந்தார்களே தவிர அங்கம் நோக உழைக்க வரவில்லை. குடியேற்றத்துக்குத் தடையாக அந்த நாட்டுக் குடிமக்கள் இருந்து அவர்களை எதிர்த்துப் போராடச்சொல்லியிருந்தால், உற்சாகத்தோடு துப்பாக்கியைத் தோளில் தூக்கியிருப்பார்கள். ஆனால், மரம் வெட்டவும், மண் வெட்டவும், கல்லுடைக்கவும், சாந்து பூசவும் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வராதா என்ன? ஆனால், அவர்கள் கோபம் பலிக்கவில்லை. உழைக்காதவர்களுக்கு உணவுப் பங்கு கிடைக்காதென்று வீதிவகுத்து விட்டான் கொலம்பஸ் தரம் தெரியாதவன் என்று அவனைத் திட்டிக்கொண்டே அவர்கள் வேலை செய்தார்கள்.

நகர் உருவாக்கும் வேலை நடக்கும்பொழுதே ஓஜிடா என்பவன் தலைமையில் படைவீரர் கூட்டம் ஒன்று தங்கம் கிடைக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கக் கிளம்பியது. ஒஜிடா ஸ்பானிய வீரர்களோடு, இந்திய வழிகாட்டிகள் சிலரையும் கூட்டிச் சென்றான். அக்கூட்டத்தினர் இஸ்பானியோலாப் பெரும் பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் ஊடுருவிச் சென்று மத்திய கோர்டிலசா மலையடிவாரத்தில் உள்ள சிபாலோவை யடைந்தார்கள். அங்கு தங்கம் கிடைக்கும் என்பதற்குரிய ஏராளமான சான்றுகளுடன். மூன்று பெரிய தங்கக் கட்டிகளையும் எடுத்துக் கொண்டு, ஆரவாரத்தோடு அவன் இரண்டே வாரத்தில் இசபெல்லாவுக்குத் திரும்பி வந்துவிட்டான்.