பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23

தெரியாது. இந்தியர்களின் வீட்டிலே எப்பொழுது பார்த்தாலும் பல நண்பர்களும் உறவினர்களும் இருப்பது போலத் தோன்றிற்று. ஜூடிக்கு இது குழப்பத்தை உண்டாக்கியது. தேநீர் அருந்துவதற்காகப் பள்ளித்தோழி ஒருத்தியின் வீட்டுக்கு ஜூடி சில வேளைகளில் செல்லுவாள். அங்குள்ள மற்ற குழந்தைகள் அவளுடன் பிறக்காதவர்களா அல்லது பெரியப்பன், சிற்றப்பன் மக்களா என்று தெரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒருத்தி ஆயாவின் மகளாகக் கூட இருக்கலாம். ஜூடியால் அவர்களை இன்னார் என்று திட்டமாக அறிந்துகொள்ள இயலவில்லை!

சென்னையின் மத்தியில்கூட மரங்கள் அடர்ந்த பெரிய தோட்டங்களும், அவற்றினிடையே நீண்டு கிடக்கும் பெரிய வீடுகளும் இருந்தன. அவளுடைய பள்ளித் தோழிகளில் சிலர் அங்கு வசித்தார்கள். இருளண்டிய கூடத்தைக் கடந்து மறுபக்கம் சென்றால் அங்கே ஓடு வேய்ந்த விசாலமான தாழ்வாரம் இருக்கும். அந்த இடம் ஒரு பெரிய பண்ணையின் முற்றம்போலத் தோன்றும். அங்கே பலவகையான மக்கள் சமைத்தல், துணி துவைத்தல், நாற்காலிகளைச் சரிப்படுத்துதல், குழந்தைகளைத் தொட்டிலிலிட்டு ஆட்டுதல், பூக்கட்டுதல் என்று இவ்வாறு எல்லாவிதமான வேலைகளும் செய்துகொண்டிருப்பார்கள். கோழிகளும், வெள்ளாடுகளும் இருக்கும். ஒன்றிரண்டு எருமைகள் படுத்துக்கிடக்கும். பசுமாடுகள் நிச்சயமாக உண்டு. வயது வந்தவர்களெல்லாம் சிற்றப்பன், சிற்றன்னையாகவோ, மாமன் அத்தையாகவோ, பெரியப்பன் பெரியன்னையாகவோ இருப்பார்கள். பெரும்பாலும் அங்கே வயதுவந்த கிழவி ஒருத்தியிருப்பாள். அவளைக் கண்டால் எல்லோருக்கும் பயம். இந்த வீடுகளெல்லாம் போய்ப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் பழங்காலத்தவை. ஜூடியின் தோழிகளில்