பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

பலபேர் தனித்தனியான சிறு இல்லங்களில் வசித்தனர்; அல்லது மாடிப்பகுதிகளில் வசித்தனர். வெய்யிற் காலத்தில் மாடிகள் மிகுந்த வெப்பமாக இருக்கும்.

கோடை விடுமுறையை மலைப்பகுதிகளில் கழித்து விட்டு ஜூடி பள்ளிக்குத் திரும்பி வந்தபோது அவளுடைய வகுப்பிலே ஆங்கிலப் பெண்கள் யாரும் இல்லை. இளஞ்சிறுமிகள் சிலர்மட்டும் பள்ளியில் இருந்தார்கள்.

இப்பொழுது ஜூடிக்கு வயது பதினொன்று. அதே வயதுடைய மற்ற ஆங்கிலப் பெண்கள் பெருபாலும் மலைப்பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்குச் சென்றுவிட்டனர். அல்லது அவர்களுடைய பெற்றோருடன் இந்தியாவைவிட்டு இங்கிலாந்து திரும்புவார்கள். அப்பொழுதுதான் ஜூடியின் தன் அண்ணன் ஜானை மீண்டும் பார்க்க முடியும். இந்தியாவில் இருப்பது ஒருவகையில் வேடிக்கையாகத்தான் இருந்தது. இது இந்தியர்களின் நாடு. பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர், ஆப்பிரிக்கர்கள் போல ஆங்கிலேயரும் உண்மையில் அன்னியர்களே. ஆனால் இந்தியர்களுக்கு ஆங்கிலேயரிடத்தில் விருப்பம் அதிகம் என்று தோன்றிற்று. தெருமுனைகளிலும், கடை முகப்புகளிலும் ஆங்கிலத்திலே அறிக்கைகள் காணப்பட்டன. ஜூடியின் தங்தை ‘ஹிந்து’ என்ற தினசரிப் பத்திரிகை படித்து வந்தார். அது ஆங்கிலத்திலேயே வெளியாயிற்று. பல படங்களோடு ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாவதைத் தவிர மற்ற நாட்களில் அந்தப் பத்திரிகையிலே அத்தனை கவர்ச்சியில்லை என்பது ஜூடியின் எண்ணம். வயது வந்தவர்களுக்கு விருப்பமான பத்திரிகைகளெல்லாம் வழக்கமாகக் கவர்ச்சியற்றவை தானே?