பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. அதற்குமேல் இரண்டு நாட்களுக்குப் பள்ளிக்கூடம் கிடையாது; ஆனால் வீட்டில் செய்யவேண்டிய பள்ளி வேலைகள் எத்தனை! சரித்திர பாடத்தை ஜூடி முதலில் தொடங்கினாள்; ஆனால் எல்லாம் ஒரு காதில் புகுந்து மற்றொரு காதில் வெளிச்சென்றுவிட்டது. அப்பொழுது ஆயா வீரிட்டுச் சத்தம் போடுவது காதில் விழுந்தது. எதற்காக அப்படி சத்தம் போடுகிறாள்? பாம்பாக இருக்காது - இருக்குமா? துணி துவைக்கும் ஆயா வாசுகியும் வீரிட்டுக்கத்தினாள். ஜூடி துள்ளி எழுந்து என்ன விஷயமென்று அவர்களைக் கேட்டாள். பெஞ்சமினைக் காணோம்! தோட்டத்திலே விளையாடிக் கொண்டிருந்தவன் திடீரென்று மறைந்துவிட்டான். கொதிக்கின்ற வீதி வழியாக ஜூடி ஓடிப்பார்த்தாள். அங்கே யாருமில்லை; பெஞ்சமினும் இல்லை. திடீரென்று அவளுக்கு வேலியிலே உள்ள சந்தைப் பற்றிய நினைவு வந்தது. அங்கே பூக்கொடிகள் மிதிபட்டுக் கிடந்தன. ஜூடி ஒரு நாற்காலியின் மீதேறி வேலிக்கு மேலே எட்டிப் பார்த்தாள். அடுத்த பக்கத்திலிருக்கும் அழகிய தோட்டத்திலே அந்த வீட்டு அம்மாளின் கையோடு கைசேர்த்து, பெஞ்சமின் நின்று கொண்டிருந்தான். கப்பல்அலரிப்பூவைப்போல வெண்மையானதும் நுணுக்கமான ஜரிகை வேலை செய்த கரையையுடையதுமான அழகான சேலையொன்றை அந்த அம்மாள் உடுத்தியிருந்தாள். பெஞ்சமின் உயரத்திற்கு அவள் குனிந்து நிற்கவே அவளுடைய வைரத்தோடுகள் சூரிய ஒளியிலே ஜொலித்தன. மாமரங்களில் ஒன்றை அவள் சுட்டிக் காட்டினாள்; பெஞ்சமின் வேகமாகத் தலையை அசைத்தான். குட்டையான ஒரு நீலநிறக் கால் சட்டையை அவன் அணிந்திருந்தான். வழக்கம்போல அவன் மிதியடி அணியவில்லை. மிதியடியென்றால் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அவனுடைய பாதங்களின் அடிப்பாகம் நன்றாகத் தடித்துவிட்டது, அதனால் அவனுக்குப் பொடிச் சுடாது.