பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35

அவனை உடனே திருப்பி அழைத்துக்கொண்டு போகாவிட்டால் கூச்சலிட்டு அழத் தொடங்கிவிடுவான் என்று ஜூடிக்குத் தெரியும். போய் வருகிறேன் என்று சொல்லி அவள் எழுந்தாள். அவள் புறப்படும்போது தாழ்வாரத்திற்கு ஒருவர் வந்தார். அந்த அம்மாளுக்குக் கணவராகவும் லட்சுமிக்குப் பாட்டனாராகவும் இருக்கவேண்டும் என்று ஜூடி நினைத்தாள். அட்டை கிழிந்துபோன இரண்டு பழைய புத்தகங்களை அவர் வைத்துக்கொண்டிருந்தார். அவர் தலையிலே முன்புறம் ஷவரம் செய்யப்பட்டிருந்தது. பின்னால் நீளமான மயிர்முடி. லட்சுமியைப் பார்த்துச் சிரித்துவிட்டு அவர் அன்போடு ஜூடியைப் பார்த்தார். அந்தப் புத்தகங்களிலிருந்து அவள் குதித்தது போல அவருக்குத் தோன்றினாள் போலும். ஜூடி வணக்கம் செய்தாள். ஆனால் அவள் அங்கியைப் பிடித்து பெஞ்சமின் இழுத்ததால் உடனே புறப்படுவது நல்லதென்று அவள் தீர்மானித்தாள்.

வேலி வரையிலும் அவர்கள் கூட லட்சுமி வந்தாள். லட்சுமியிடத்திலே ஜூடிக்கு உண்மையிலேயே ஒருவிதமான பயம். லட்சுமி மிக நன்றாகத் தண்ணீரில் முழுகி நீந்துவாள்; ஜூடியைவிட வயதான பல சிறுமிகளுக்கு மத்தியிலே அவள் எப்பொழுதும் இருப்பாள். அவர்களுக்கு ஒருவரையொருவர் நன்றாகத் தெரியும். விளையாட்டிலே எல்லோரும் கெட்டிக்காரிகள். அவர்கள் யாரும் ஜூடியின் பள்ளிக்கு வருவதில்லை. “ஜூடி, வேலியிலிருக்கும் இந்த சந்தை அடைக்காதீர்கள்” என்றாள் லட்சுமி.