பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10

அழகிய காலை நேரம் என்று ஜூடி தனக்குத்தானே கொள்ளும்படியாக சுமார் ஒரு மணி நேரம் இருந்தது. இங்கிலாந்தில் இம்மாதிரி இருந்தால் அது அழகிய காலை நேரந்தான். ஆனால் இது இங்கிலாந்து அல்ல; இது சென்னை. இந்த நாள் இங்கே வெப்பமிகுந்ததாகத்தான் இருக்கும். பள்ளியிலெல்லாம் ஜூடிக்கு வியா்வை வழிந்துக்கொண்டிருக்கும். மேலெல்லாம் பிசுக் கொட்டிக்கொள்ளும். மாலை நேரத்திலேயே அவளுக்கு உறக்கம் தள்ளிக்கொண்டு வரும். பள்ளி முடிந்த பிறகு மாலையிலே அவளுக்கு ஒரே அலுப்பாக இருக்கும். உடம்பெல்லாம் சூடேறிவிடும். அதனால் அவள் வீட்டிலே செய்ய வேண்டிய பள்ளி வேலைகளையெல்லாம் அதிகாலையிலேயே பெரும்பாலும் செய்தாள். ஆனால் பெஞ்சமின் இவள் வேலையிலே குறுக்கிடுவான். ஆயாவால் அவனைத் தடுத்து நிறுத்தவே முடியாது. அப்படி நிறுத்த அவள் விரும்புவதில்லையென்றும் சொல்லவேண்டும். பெஞ்சமினுக்கு மூன்று வயதுதான் ஆகிறது; இருந்தாலும் அவன் தன்னுடைய ஆயாவான மேரியைத் தன் விருப்பம்போல ஆட்டிவைக்கக் கூடியவனாக இருந்தான். அடிக்கடி ஏதாவது துடுக்குத்தனமான காரியத்தைச் செய்வதிலே அவனுக்கு விருப்பம் அதிகம்.

அதிகாலையில் சில சமயங்களில் ஜூடி தன் அண்ணன் ஜானுக்குக் கடிதம் எழுதுவாள். அவன் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று அங்கே பள்ளியில் படித்து வந்தான். அவன் பதில் எழுதுவான். கடுமையான குளிர் காற்றிலே கால்பந்து விளையாடும்போது ஸ்வெட்டரையும் அதைப் போன்ற அங்கிகளையும் அணிந்துகொள்ளவேண்டியிருப்பதைப் பற்றி அவன் அதிலே குறிப்பிடுவான். அப்படி அணிந்துகொள்ள முடியுமா என்று ஜூடிக்குத் தோன்றும்.