பக்கம்:கடவுள் பாட்டு.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

துயிலில் சோம்பிக் கிடப்போர்க்குச்
சோர்வ கற்றித் தென்பளிப்பாய்
அயலில் துயரப் பட்டோர்க்குன்
அடியின் நிழலை யருள்வாயே!

24


நல்ல நல்ல குணமெல்லாம்
நல்கும் ஆற்றல் உனக்குண்டு
பல்லோ ருள்ளும் எனைச்சிறக்கப்
பண்ணும் ஆற்றல் உனக்குண்டு
கல்வி செல்வம் எனைச்சேரக்
கனியும் அருளும் உனக்குண்டு
எல்லாம் தந்துன் திருவடியை
எய்தும் பேறும் தருவாயே!

25


உள்ளத் துள்ளே ஓய்வின்றி
ஊறும் அமிழ்தே, பெருங்கருணை
வெள்ளப் பொழிவே, அறிவென்னும்
விளக்கை ஏற்றும் ஒளிச்சுடரே,
கள்ள மற்றார் அசைவெல்லாம்
காட்சிப் பொருளாய் வெளிப்பட்டுத்
தெள்ளத் தெளியார் உள்ளத்தைத்
தெளிவித் தருளும் திருவாளா!

26


ஆறு காலப் பூசையிலும்
ஐயா உன்னைத் தொழுதேத்தும்
பேறு கிடைக்கப் பெற்றிலனே
பிழையென் பிழையோ கொற்றவனே!
நூறு முறைதான் தொழுதாலும்
நோன்பு காத்துக் கிடந்தாலும்
வேறு யாரும் எனைப்போலே
வேண்டி யன்பாய்த் தொழுவாரோ?

27