பக்கம்:கடவுள் பாட்டு.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சமயம் சார்ந்து பிறரோடு
சண்டை யிட்டுக் கொள்ளார்முன்
இமயங் குமரி எங்கேனும்
இறைவா நீவந் திருப்பாயே!

59


மெச்சும் படிக்குத் தாம்கற்ற
மேலாம் தெய்வ மொழிகூறி
அர்ச்ச னைகள் பலசெய்தே
ஐயா உன்னை வழிபட்டார்
பச்சைத் தமிழில் இசைபாடிப்
பாதம் பணிந்தேன் என்முன்னே
இச்சை யோடு நீ வந்தாய்
ஏமாந் தாரே பகட்டாளர்!

60

வாடைக் காலம் கம்பளியை
வழங்கிக் குளிரைப் போக்கிடுவாய்
கோடைக் காலம் இளநீரைக்
கொடுத்துக் குளிர்ச்சி சேர்த்திடுவாய்
தேடிப் போகும் பொரு ளெல்லாம்
தேவைக் கீவாய் நெஞ்சரங்கில்
ஆடிக் களிக்கும் தேவா உன்
அருளைப் பாடிக் களிப்பேனே!

61

கண்ணில் நிறைந்த கடலானாய்
கருத்தில் நிறைந்த அமுதானாய்
விண்ணில் நிறைந்த வெளியானாய்
வெளியில் நிறைந்த ஒளியானாய்
மண்ணில் பொருள்கள் யாவுக்கும்
மன்னன் ஆன பெருந்தேவா!
எண்ணில் வந்தென் இடர்தீர்க்க
எளிதில் ஓடி வருவாயே!

62