29
கதிரின் சுழற்சி தனில்உன்றன்
கடமை தவறா நினையுணர்ந்தேன்
அதிரும் வான மழைதனில் உன்
அருளை யுணர்ந்தேன் எம்பெருமான்
புதிரைப் போலே இரவெல்லாம்
பூத்தி ருந்து பகல் முழுதும்
எதிலோ மறையும் மீன்களிலுன்
இறைமை யுணர்ந்து தொழுதேனே!
77
உயிர்கட் கெல்லாம் உயிராகி
உள்ளே யிருக்கும் பெருமானே
பயிர்கட் கெல்லாம் நீராகிப்
பாயும் அருளுன் அருளாமே
அயரா தலையைப் பாய்ச்சிவரும்
ஆழக் கடல்போல் சூழ்ந்திருக்கும்
துயரார் உலகில் உன்னடியே
துணையாய்க் கொண்டு வாழ்கின்றேன்.
78
ஆகும் எல்லாம் உன்னடியில்
அரும்பி முளைத்து வளர்வனவே
சாகும் எல்லாம் உன்னடியில்
சாய்ந்து வீழும் தகையனவே
ஆக எல்லாம் உன்னடியின்
ஆணை பெற்று நடப்பனவே
தேகம் பெற்ற பயனுன்றன்
திருப்பொன் அடியைப் பற்றுவதே!
79
கலங்கித் துயரால் அழும்போது
கண்ணிர் துடைக்கும் தாயானாய்
விலங்கின் வெறியைக் கொளும்போது
விலக்கும் அறிவுக் குருவானாய்