பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


ஞாயிறு வழிபாடு:

மக்கள் நிலத்திலே உள்ள ஆறு, மலை, காடு முதலிய வற்றோடு நின்றார்களா? மேலே தெரியும் ஞாயிறு, திங்கள், மேலிருந்து வரும் மழை ஆகியவற்றையும் அவை தரும் பெரும்பயன் கருதிப் போற்றி வணங்கினர். சிலப்பதிகாரம் என்னும் தமிழ்நூலில் அதன் ஆசிரியர் இளங்கோவடிகள்

“திங்களைப் போற்றுதும்-ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும்”

என்று கூறியிருப்பது ஈண்டு கருதத்தக்கது, இம் முப்பொருள்களுள் ஞாயிறே முதன்மையாதலின், அதனைப் பெரிய கடவுளாக்கி விட்டனர். சூரிய பகவான், சூரிய தேவன், சூரியநாராயணன் முதலிய பெயர்களால் அதனைக் குறிப்பிடலாயினர். அதோ எரிந்து கொண்டு போகும் சூரிய பகவான் எல்லாம் அறிவான் - அவன் கேட்டுத் தீர்ப்பு வழங்கட்டும் - அவன் ஆணையாகக் கூறுகிறேன்’, என்று ஆணையிடும் அளவுக்கு ஞாயிற்றைக் கடவுளாக உயர்த்தினர். அதற்குச் சிலைகளும் கோயில் களும் அமைத்து வழிபட்டனர். தமிழ்நாட்டில் சூரியனார் கோயில்’ என்ற பெயரில் ஒர் ஊரும் உள்ளது. நாடோறும் காலையில் ஞாயிற்றை வழிபடுவதும் தைப் பொங்கல் நாளில் ஞாயிற்றுக்குப் படையல் போடுவதும் தமிழ் மக்களின் வழக்கமாகும்.

இங்கு மட்டுமா? உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு முறைகளில் ஞாயிறு வழிபாடு நடைபெறு கிறது. சீனா, அமெரிக்கக் கண்டம், ஐரோப்பா


  1. சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - மங்கல வாழ்த்துப்பாடல்