பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


பழைய படையலின் தொடர்பு


மிகப் பழங்காலத்து மக்கள் கடவுள் பெயரால் என்ன படையல் போட்டார்களோ-எவ்வாறு படையல் போட்டார்களோ, அம்முறையினை வாழையடி வாழையாக இக்காலத்திலும் சில குடும்பங்கள் பின்பற்றி வருவதைக் காணலாம். சில வழிபாடுகளின் போது, தேனும் தினைமாவும் படைத்தலும், தினைமாவால் மாவிளக்கு போடுதலும் செய்கின்றனர் கார்த்திகைத் திங்களில் வரும் கார்த்திகை நாளின் (கிருத்திகை) மறுநாளாகிய நாட்டுக் கார்த்திகை நாளிலும், தைத் திங்களின் இரண் டாம் நாளாகிய மாட்டுப் பொங்கல் நாளிலும், முருங்கைக் கீரை துவட்டுதல்-வாழைக்காய் பொரித்தல்கீரைத்தண்டு கூட்டு செய்தல்-பறங்கிக்காய் பொரியல் செய்தல்-கொழுக்கட்டை செய்தல்-வடையும் சர்க்கரைப் பொங்கலும் செய்தல் முதலியன, ஆண்டு தோறும் விடாமல் நடைபெறுகின்றன. இந்த இரண்டு நாள் களிலும் மரக்கறி உணவை (Wegetarian) வழக்கமான இடத்தில் வைத்துப் படைப்பர். மற்றும், இவ்விரு நாள்களிலும், காத்தவராயன் என்னும் தெய்வத்திற்குப் படைத்தல் (காத்தவராயன் படையல்) என்னும் பெயரால், காயும் கருவாடும் குழம்பு செய்தும்-ஆட்டுக்கறி குழம்பிட்டும்-மதுவகை வாங்கி வந்தும், மரக்கறி உணவு வைத்திருக்கும் இடத்திற்குச் சிறிது அப்பால் வேறோர் இடத்தில் தனியாக வைத்துப் படைப்பது வாடிக்கையான வழக்கம். மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்களும், வாழையடி வாழையாக வரும் வழக்கத்தை விடலாகாது என்பதற்காக மது வைத்துப் படைத்துப் பின்னர் அந்த மதுவை யாருக்காவது கொடுத்து விடுதல் மரபு.