பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


பாலும் திறந்த வெளியிலேயே பொங்கியிருப்பர். அந்தப் பழக்கப்படி, இந்தக் காலத்திலும், பெரிய மாளிகை உடையவர்களும், திறந்தவெளி வாசலிலேயே பொங்குகின்றனர் - படைக்கின்றனர். திறந்தவெளி வாசல் வசதியில்லாதவர் சிலர், வீட்டுக்குள் பொங்கும் இடத்திற்கு மேலேயுள்ள சில ஒடுகளை எடுத்து விட்டுச் செயற்கை முறையில் தற்காலிகத் திறந்தவெளி உண்டாக்கிப் பொங்கியதை யான் பார்த் திருக்கிறேன். மற்றும் இக்காலத்துப் புதிய காய்கறி வகைகளை விலக்கிப் பழைய முறையில் வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், கருனைக் கிழங்கு, கரும்பு. மஞ்சள்கொத்து முதலியவற்றையே படையலுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்தக் காலத்தில் உணவுப் பொருள்களை வாழை இலையில் இட்டுப் படைக்கின்றோம். அந்தக் காலத்தில் பூசனி இலையில் இட்டுப் படைத்தனர். தமிழ்நாடு-தென்னார்க்காடு மாவட்டம்- கடலூர் வட்டப் பகுதியில், இந்தக் காலத்திலும், பெரும் பொங்கல் நாளில், உணவுப் பொருள்களைப் பூசனி இலையில் இட்டே பழைய வழக்கப்படி படைக் கின்றனர். பொங்கல் படையலின் வரலாறு இது. புரட்டாசித் திங்களின் சனிக் கிழமைகளில் திருமாலுக்குச் செய்யும் தளிகைப் படையல், புத்தாண்டு நாள் படையல் முதலியனவும் பண்டு தொட்டுவரும் அடிப்படையை ஒட்டியே நடைபெறுகின்றன.


இக்காலத்தில் புதுப் புதுப் பொருள்கள் தோன்றியிருப்பினும், அவற்றை விலக்கி, பழங்காலத்தில் பயன்படுத்திய பொருள்களையே இக்காலத்தும் தொடர்ந்து படையல் நாள்களில் மக்கள் பயன்படுத்துவதை நோக்குங்கால், பண்டைக்கால மக்கள், இயற்கையை ஒட்டியே கடவுள்களைப் படைத்தனர் - கடவுள்கட்குப் படையல் செய்தனர் என்பது வெளிப்படை.