பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
123
 


படுவது நடுகல் வழிபாடு’ எனப்படும்; இற்றைக்ரு (1988) இரண்டாயிரத்தைந் நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தாகக் கருதப்படும் தொல்காப்பியம் என்னும் நூலில் ஆசிரியர் தொல்காப்பியனார் நடுகல் வழிபாட்டை ஆறு துறைப்படுத்திக் கூறியுள்ளார். அவை: காட்சி, கால் கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்னும் ஆறுமாகும்.

ஃ காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர...’


என்பது தொல்காப்பிய நூற்பாப் பகுதி. அவற்றுள், காட்சி என்பது, கற்கள் நிறைந்த பகுதியிலிருந்து குறிப்பிட்ட நல்ல ஒரு கல்வினைக் கண்டு தெரிவு செய்த லாகும். கால்கோள் என்பது, தேர்ந்தெடுத்த கல்லினைக் கொண்டு வந்து வழிபாட்டுக்கு உரிய செயலைத் தொடங்குதலாகும். நீர்ப்படை என்பது கல்லினை நீரில் இட்டு வைத்தோ-நீர் விட்டோ தூய்மை செய்தலாகும். நடுதல் என்பது, கல்லிலே போர் மறவனது பெயரும் பெருமையும் பொறித்து, அவன் இறந்த இடத் திலோ அல்லது அவனது உடலைப்புதைத்த இடத்திலோ நட்டு, மயில் பீலியும் (தோகையும்) மாலையும் அணிவித்து ஊன்றச் செய்தலாகும். பெரும்படை என்பது, இக் காலத்தில் கோயிலில் செய்யும் குடமுழுக்கு (கும்பா பிஷேகம்) போன்ற சிறப்புக்களைச் செய்து படையல் போட்டுப் பெருமைப் படுத்தலாகும். வாழ்த்தல் என்பது, நட்ட கல்லைக் கடவுளாக மதித்து வணங்கி வாழ்த்துதல் ஆகும். இவ்வாறாக, செத்துப் போன வீர மறவர் தெய்வமாக்கப்பட்ட வரலாறு தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. -


ஃ தொல்காப்பியப்-பொருளதிகாரம்-புறத்திணையியல்-5.