பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
127
 


முன்னே வைத்தால், அதை அவன் எடுத்துப் பருகு வானோ-மாட்டானோ என்பது கருத்து. இந்தப் பாடலால், நடுகல்லின் முன் மது முதலியவற்றை வைத்துப் படைக்கும் மரபு உண்டு என்னும் செய்தி கிடைக்கிறது. அடுத்து, வடமோதங் கிழார் என்பவர் பாடிய புறப்பாட்டுப் (260) பகுதி வருமாறு :

‘உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
இடம் பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படம்செய் பந்தர்க் கல்மிசையதுவே”

என்பது பாடல் பகுதி. கருத்து:- பலரும் இருக்க இடம் கொள்ளாத சிறிய இடத்தில் வீரனுக்குக் கல் நடப் பட்டுள்ளது; அதில் அவனுடைய புகழ் வாய்ந்த பெயர் பொறிக்கப்பட்டுள்ளது; மேலே மயில் பீலி அணியப் பட்டுள்ளது; கல்லின் மேலே நிழலுக்காகத் துணியால் பந்தர் (பந்தல்) போடப்பட்டுள்ளது'- என்பது கருத்து. இந்தப் பாடலால், நடுகல்லின் மேலே நிழலுக்காகப் பந்தல் போடப்பட்ட புதுச்செய்தி கிடைக்கிறது. பந்தல் போடுவது என்பது, கோயில் கட்டுவதின் தொடக்கச் செயலாகும். அடுத்து ஆவூர் மூலங்கிழார் பாடிய புறப்பாட்டுப் (261) பகுதி வருமாறு:-

‘நடுகல் ஆகிய
வெல்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம் கமையுறக் கலங்கிய
கழிகல மகடூஉ ..... ..

என்பது பாடல் பகுதி. கருத்து. மறவன் இறந்து நடுகல் ஆகிவிட்டமையால், அவனுடைய மனைவி. அணிகலன்களையும் கூந்தலையும் களைந்து மொட்டைத் தலையுடன் கைம்மை நோன்பு கொண்டுள்ளாள்’ என்பது கருத்து.