பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11'
 


சீர்திருத்த உணர்வு

இந்நிலையில், மேற் குறித்துள்ள குறைபாடுகள் இல்லாத உலகம் இருக்க முடியாதா? இவ்வளவு குறைபாட்டுடன் கடவுள் ஏன் இவ்வுலகத்தைப் படைக்க வேண்டும்?-என்றெல்லாம் என் சிந்தனையில் உறுத்தல் ஏற்பட்டது. உலக நன்மைக்காகப் புத்தர், ஏசு பிரான், திருவள்ளுவர் முதலான பெருமக்கள் பலர் பெரிதும் பாடுபட்டுள்ளனர். கைமேல் பயன் கிடைத்ததா? அவர் தம் முயற்சிகள் தோல்வியடைந்தன என்று சொல்ல வேண்டிய நிலையிலேயே உலகம் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. இதைப் பற்றியும் மீண்டும் மீண்டும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்தேன். யானும் ஏதேனும் நல்லது செய்யவேண்டும் போலத் தோன்றியது யான் நேர்மையின் கூர்மையிலே நிற்பவன் என்று கூற முடியாதெனினும், நேர்மையின் கூர்மையிலே நிற்க முயலுபவன் என்றாவது என்னைக் கூற முடியும் என நினைக்கிறேன். எனவே, என்னால் இயன்ற அளவு சீர்திருத்த உணர்வை உலகுக்கு ஊட்ட முற்படலானேன்.

வேறு சீர்திருத்தக்காரர்களின் சொற்பொழிவு களைக் கேட்டதாலோ-அவர்தம் நூல்களைப் படித்ததாலோ-வேறு பிறரது தூண்டுதலாலோ எனக்குச் சீர்திருத்த உணர்வு தோன்றவில்லை; எனது ஆழ்ந்த சிந்தனையின் வாயிலாகவே-எனது பட்டறிவின் (அனுபவத்தின்) வாயிலாகவே-எனது மனச் சான்றின் வாயிலாகவே எனக்குச் சீர்திருத்த உணர்வு தோன்றி வளரலாயிற்று.

நெஞ்சு பொறுப்பதில்லை

இளமைப் பருவத்திலிருந்தே எனக்கு ஒரு வழக்கம் உண்டு, எங்கேனும் யாரேனும் தீயது ஏதேனும் செய்வதைக் கண்டால், நமக்கு என்ன-யாராவது எப்படி