பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
141
 


தில் வட இந்தியாவில் வாழ்ந்த பாண்டவ மன்னர்கள் ஐவர்க்கும் மனைவியாயிருந்தவள் திரெளபதி. அதனால் இவளை ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினி என்று கூறுவர். ஒரு பெண் வாழ்க்கையில் ஒருவனை மட்டுமே மணந்து கடைசி வரையும் கற்பு நெறி பிறழாதிருப்பதே தமிழ் நாட்டு மரபு. ஐவரை மணப்பினும் அழியாத பத்தினி என்னும் பெயர் பெறுவது வட இந்தியாவின் ஒரு பகுதி மரபு. தன் கணவன்மார் ஐவர்க்கும் பங்காளியும் பகைவனுமாகிய துரியோதனன் என்னும் பேரரசனை வீழ்த்தியதில் காட்டிய வீரம் பற்றியே திரெளபதி பத்தினித் தெய்வமானாள்; “திரெளபதி அம்மன்’ என்ற பெயருடன் கோயில் கட்டி வழிபடப் பெறுகிறாள். திரெளபதியம்மன் கோயில்கள் இந்தியாவில் ஏராளம்-ஏராளம். திரெளபதியம்மன் பெயரால் நடைபெறும் விழாக்கள் மிகப் பல. தெய்வம் பிறந்த வரலாறு இப்போது தெரியலாமே!


மாரியம்மன் வழிபாடு

மாரியம்மன் என்னும் பெயரிலும் நாடெங்கும் கோயில்கள் உள. மாரியாத்தா என்ற பெயராலும் வழங்குவது உண்டு. அம்மன்-ஆத்தா என்றால் தாய் என்று பொருளாகும்; மாரி என்றால் மழையாகும். எனவே, மலழயைத் தந்து மக்களை வாழவைக்கும். தெய்வம் என்னும் பொருளில் மாரியம்மன், மாரியாத்தா என்னும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மாரியம்மன் கோயில் விழாக்கள் நாட்டில் மிகவும் பெயர் பெற்றவை. கண்ணகியும் திரெளபதியும் போல மாரியம்மனும் மனிதப் பெண்ணே. திருவள்ளுவரின் மனைவிதான் மாரியம்மன் ஆனாள் என்பது ஒரு கதை. பிருகு முனிவரின் மனைவி நாகாவலி என்பவளே மாரியம்மன் ஆனாள் என்பது மற்றொரு கதை. சமதக்கிளி முனிவரின்