பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
148
 


பாம்புகட்கும் அவ்வாறே இருக்கும். ஒரு மனிதன் ஊழல் செய்கிறான் என்றால், அந்த ஊழல் மனித இனத்தின் பொதுப்பண்பு-ஒருவனது ஊழலில் மனித இனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பங்கு உண்டு, தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்தச் செகத்தினை அழித்திடுவோம்’ என்று சுப்பிரமணிய பாரதியார் கூறியிருப்பதின் உட்கருத்து, ஒரு மனிதனின் துன்பத்தில் மனித இனம் முழுவதற்கும் பங்கு உண்டு என்பதேயாம்.


எனவே, மனிதனிடத்தில் இப்போது உள்ளதற்கு மேல் மிகுதியான பெருந்தன்மையை எதிர்பார்க்க முடியாது. டயோனியசும் ஒற்றியூர்த் துறவியும் உண்மையான மனிதர்களையே பார்த்திருக்கின்றனர்-ஆனால், அவர்கள் மனிதரிடத்தில் தெய்வத் தன்மையை எதிர்பார்த்திருக்கிறார்கள். மனிதர் பொதுவாக எல்லாருக்கும் இருப்பதற்கும் மேற்பட்ட உயரிய பண்பை உடையவர்களாக விளங்கும்போது தெய்வத்தன்மை உடையவர்களாக மாறுகின்றனர். டயோனியசு மனிதரைத் தேடுகிறேன் என்று கூறாமல், மனிதர்க்கு நடுவே மனிதத் தெய்வத்தைத் தேடுகிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும்.


மனிதர்களை நோக்கி நாய் போகிறது-நரிபோகிறது என்று கூறிய ஒற்றியூர்த் துறவி, அந்த வழியாக வடலூர் இராமலிங்க வள்ளலார் சென்று கொண்டிருந்த போது, அவரை நோக்கி, இதோ ஒரு மனிதர் போகிறார்’ என்று கூறினாராம். துறவி இவ்வாறு கூறாமல், இதோ ஒரு மனிதத் தெய்வம் போகிறது’ என்று கூறியிருக்க வேண்டும். இழிந்த பண்பினின்றும் படிப்படியாக விலகி உயர்ந்த பண்பைக் கடைப்பிடிக்கும் போது மனிதன் படிப்படியாகத் தெய்வ நிலைக்கு உயருகிறான். மற்ற மாந்தரினும் குறிப்பிட்ட சிலரிடம் உள்ள வியத்தகு பெருந்தன்மை அதாவது உயரிய பண்பு தெய்வத் தன்மை என்