பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
151
 


திருமகளைப் பற்றியும் பேசவேண்டியதில்லை. மும்மூர்த்திகளுள் இவ்விருவரும்போக மூன்றாமவராகிய சிவன் மட்டும் யாருக்கும் பிள்ளையாய்த் தோன்றி வளர்ந்து வாழவில்லையாம். ஆனால், சிவனுடைய மனைவி எனச் சொல்லப்படும் சிவை வெவ்வேறு காலத்தில், பர்வதராசன் மகள் (பார்வதி) ஆகவும், தட்சனுடைய மகள் (தாட்சாயணி) ஆகவும், மீனக் கொடியுடைய பாண்டிய மன்னனின் மகள் (மீனாட்சி) ஆகவும் தோன்றியுள்ளாள் எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவன் மட்டும் எவருக்காவது பிள்ளையாய்த் தோன்றியதாக எந்தப் புராணமும் கூறவில்லை என்றே தோன்றுகிறது.

தயிழ் மொழியில் ‘பிள்ளைத் தமிழ்” என்னும் ஒருவகை நூல் உண்டு. அஃதாவது: ஏதாவது ஒரு தெய்வத்தையோ சிறப்புறச் செயல் புரிந்த பெரியாரையோ சிறு பிள்ளையாகக் கற்பனை செய்து கொண்டு, அந்தப் பிள்ளையின் இயக்கத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு, ஒரு பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் (பத்துப்பத்து) நூறு பாடல்களைத் தமிழ்மொழியில் பாடியுள்ள நூலுக்குப் ‘பிள்ளைத் தமிழ்’ என்னும் பெயர் வழங்கப்படுகிறது. சிவனைத் தவிர மற்ற தெய்வங்கள் பிள்ளையாய்த் தோன்றியிருந்தது உண்டாதலின், அத்தெய்வங்களின் மேல் பிள்ளைத் தமிழ் நூல் பாடுவது மரபு. சிவன் மட்டும் எவருக்கும் பிள்ளையாய்த் தோன்றாமையினால், அத்தெய்வத்தின் மேல் பிள்ளைத் தமிழ் நூல் பாடுவது மரபு அன்று.

இது போன்ற செய்திகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இளமையில் சைவ சித்தாந்தியாயிருந்த யான், சைவத்தின் மேல் சமயம் வேறில்லை, அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் வேறொன்றும் இல்லை’ என்று இறுமாப்புடன் வாதிட்டுப் பேசுவது