பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


படைப்புக் கொள்கை

நிலைமை இவ்வாறிருக்க, படைப்புக் கொள்கையினர் கூறுவது வியப்பாயுள்ளது. அவர் கூற்று வருமாறு:- கடவுளே எல்லா உலகங்களையும் (அண்டங்களையும்) எல்லா உயிர்களையும் படைத்தார். ஓர்உயிர் இனத்துக்கும் மற்றோர் உயிர் இனத்துக்கும் தொடர்பில்லை. கடவுளே ஒவ்வோர் உயிர் இனத்தையும்தனித்தனியாகப் படைத்தது மட்டுமல்லாமல், இடையிடையேயும் புதிது புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறார்; அஃதாவது, ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவில்லை; தொடக்கக் காலத்தில் ஒன்று தோன்றுவதற்கு எது முதற்காரண மாய் இருந்ததோ, அம்முதற்காரணமே பின்னரும்பின்னரும் பல்வேறு வகை உயிர்கள் தனித்தனியே தோன்றுவதற்குக் காரணமாயுள்ளது. உயிர்களின் நன்மைக்காகவே எல்லாம் உள்ளன-என்றெல்லாம் படைப்புக் கொள்கையினர் (Creationists) கூறி வருகினறனர். இவர்கள் வேறுயாருமல்லர்; உலகில் உள்ள பல்வேறு மதங்களின் தலைவர்களும் அவர்களைப் பின் பற்றுபவருமேயாவர்.

டார்வின் (Darwin) போன்றோர் கூறுகின்ற-ஒன்று திரிந்து வேறொன்றாக மாறும் திரிபு மாற்றக் கொள்கை-அதாவது, ‘பரிணாமக் கொள்கை’ (Evolutionism) படைப்புக் கொள்கையினும் வேறுபட்டது. எனவே, எது உண்மை என்பதைக் காணப் 'படைப்புக் கொள்கை’ பற்றி இந்நூலுள் விரிவாக ஆராய்வோமாக!