பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


தொலைந்தனவே! எனவே, மேலே சுட்டியுள்ளாங்கு, கடவுள் பெயரால் கூறும் கருத்துகள் எல்லாம், அறியாமையால் உளறும் பிதற்றல்களே என்பது தெளிவு.

இவ்வளவு தானா? இன்னும் எவ்வளவோ அறியாமைப் பிதற்றல்கள் உள: “கடவுள் மேல் பழி போடுவது ஏன்? அவரவர் செய்த வினையை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும்-கடவுள் என்ன செய்வார்!"-என்பதாக ஒரு கருத்து உளறப்படுகின்றது. அவரவர் செய்த வினையை அவரவரே அனுபவித்துத் தீர வேண்டும் என்பது உண்மை; இது அறிவியல் கருத்தும் ஆகும். அங்ஙனமெனில் இடையில் கடவுள் எதற்கு பிறருக்கு நன்மை செய்பவன் திரும்ப நன்மையைப் பெறுகிறான்: பிறர்க்குத் தீமை செய்பவன் திரும்பத் தீமை அடை கிறான்; தீமை செய்தவன் முதலில் மறைந்து தப்பித்துக் கொள்ளினும் பிறகு கண்டு பிடிக்கப்பட்டு ஒறுக்கப்படுகிறான். இதற்குக் கடவுள் தேவையில்லை. இதற்குச் சமூக நீதி உள்ளது-நீதிமன்றங்கள் உள்ளன-அரசு உள்ளது. இந்த அமைப்பினால், அவரவர் செய்த வினையை அவரவர் நுகர்ந்தே தீர்வர். தீமை செய்தவன் கடவுளை வேண்டித் தப்பித்துக் கொள்வானே யாயின் கடவுள் நீதி தவறியவராவார். ஒருவன் நன்மை பெற வேண்டுமாயின் அஃது அவனது செயலைப் பொறுத்தே உள்ளது; வாளா இருந்து கொண்டு கடவுள் அருளால் நன்மை பெற்றுவிட முடியாது. ஒருவன் பிறக்கும் போதே பணக்காரனாய்ப் பிறக்கின்றான்-அதாவது பணக்காரர்க்குப் பிறக்கின்றான்; மற்றொருவன் பிறக்கும்போதே ஏழையாய்ப் பிறக்கிறான்-அதாவது ஏழைக்குப் பிறக்கிறான்; இது, அவனவன் முற்பிறவியில் செய்த வினையின் பயன்-எனச் சொல்லப்படுகிறது. அங்ஙனமெனில், இங்கும் கடவுளுக்கு வேலையில்லை; உண்மையில் இது சமுதாய அமைப்பின் கோளாறாகும்.