பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
 


செய்த உயிர் அடுத்த பிறவியில் தீமையே அடையும் என்பது ஊழ்வினை நம்பிக்கையாளரின் கருத்து. முற்பிறவிச் செயல்களுக்கேற்ப இப்போது எடுக்கும் பிறவியில் இன்னின்ன பயன் கிடைக்கும் என்று குழந்தையின் தலையில் எழுதியிருக்கும் என்ற நம்பிக்கையாளர் இதற்குத் 'தலை எழுத்து’, ‘தலை விதி’ என்னும் பெயர்கள் வழங்குகின்றனர். ஆங்கிலத்தில் இது 'Fate' எனப் படுகிறது. இந்தத் தலை எழுத்தை மாற்றுவது கடவுளுக்கே கடினமாம். 'அன்று எழுதியனுப்பியவன் இன்று மாற்றி எழுத முடியுமா?’ என்பது உலகியல் பேச்சு. அங்ஙனமெனில், இதில் இனிக் கடவுளுக்கே வேலையில்லை; அவரை வேண்ட வேண்டியதும் இல்லை. அவராலேயுந்தான் இதை மாற்ற முடியாதல்லவா?

விதி விலக்கு

ஆனால் சில சமயம் கடவுள் இதற்கு விதிவிலக்கு அளிப்பாராம். இது சார்பான கதைகள் சில வழங்கப் படுகின்றன. எடுத்துக் காட்டுக்கு ஒரு கதை வருக; மார்க்கண்டேயன் என்பவன் பதினாறு ஆண்டு காலமே வாழ்வான் என அவன் பிறக்கும்போதே 'சிவன்' என்னும் இந்து மதக்கடவுள் எழுதியனுப்பி விட்டாராம்; பதினாறு ஆண்டுகள் முடிந்ததும் எமன் மார்க்கண்டேயனது உயிரைப் பிடிக்க வந்தானாம்; அப்போது மார்க்கண்டேயன் சிவனது உருவமெனச் செதுக்கி வைக்கப்பட்டிருந்த கருங்கல் சிலையைக் கட்டிப் பிடித்துக் கொண்டானாம்; உடனே எமன் சிவனது உருவச் சிலையோடு சேர்த்துக் கயிற்றைப் போட்டு இழுத்தானாம்; சினம் கொண்ட சிவன் உண்மை உருவத்தோடு தோன்றி எமனைக் காலால் உதைத்துத் தள்ளி மார்க்கண்டேயனது உயிரைக் காப்பாற்றினாராம். மார்க்கண்டேயன் அன்று முதல் என்றும் பதினாறு அகவை (வயது) இளைஞனாகவே இருக்கின்றானாம். இது புராணக் கதை. இப்போது