பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
 


பாடுடைய பயிர்களுக்கும், கருவிகளுக்கும். பிள்ளைகளுக்கும் ஊழ்வினையே காரணம் என்று உளறுவதா? நல்ல மூளையமைப்பு உடையவர்கள் திறமை பல உடையவராயும் கல்வியறிவில் வல்லவராயும் கண்டு பிடிப்புகள் செய்வதில் கைதேர்ந்தவராயும் விளங்குகின்றனர்; அல்லாதவர்கள் அவ்வாறு விளங்க முடியவில்லை. இதற்கெல்லாம் ஊழ்வினை காரணமன்று; உடலமைப்புச் சூழ்நிலையே உண்மைக் காரணமாகும்.


மற்று,-உயிர்ப் பண்புச் சூழ்நிலையும் உடல் அமைப்புச் சூழ்நிலை போன்றதே! ஒருவர் பெரிய வள்ளலாய் வாரி வாரி வழங்குகிறார்; மங்றொருவர் கஞ்சக் கருமியாய், எச்சில் கையால் காக்கை ஓட்டாதவராய் ஈரக்கையை உதறாதவராய், பணத்தை இரும்புப் பெட்டியில் இறுக்கி வைக்கிறார்; இன்னொருவர் பிறரை ஏய்க்கிறார்; மாற்றார் பொருளைக் களவாடுகிறார். இவர்களுள் நற்பண்பு உடையவர்கள் போற்றப் பெறுகின்றனர்-தீய பண்புடையவர்கள் துாற்றப்படுகின்றனர். கடவுள் எழுதியனுப்பிய தலையெழுத்தின்படி சிலர் நல்லவராயும் சிலர் தீயவராயும் இருப்பதில்லை. அவரவர் பிறந்த மரபுவழிச் சூழ்நிலையும் சுற்றுச் சூழ்நிலையுமே இதற்குரிய காரணமாகும். இதை வலியுறுத்த இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் தரலாம் - ஆயினும், இவை போதும். எனவே, ஊழ்வினை என ஒன்று இல்லை-அது வெறுங் கற்பனையே என்பது தெளிவு.