பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38
 


அறியாமைப் பேச்சு-ஏமாற்றுப் பேச்சு வேறொன்றும் இல்லை எனலாம். இவர் ஏன் அதற்காகக் கொடிய துன்பங்களைத் துய்க்கவேண்டும்? தாம் துன்புறாமலேயே மக்களைத் திருத்தலாம்-அவர்கட்கு நன்மை உண்டாக்கலாம். சேயின் நோயைத் தீர்க்கத் தாயும் அந்த நோயைக் கொள்ள வேண்டுமா என்ன? நோயாளர்களின் நோய் தீர்க்க மருத்துவர்களும் (டாக்டர்களும்) அந்நோய்களை அடைய வேண்டுமா என்ன? வாந்தி பேதி என்னும் (Cholera) காலரா நோயைப் போக்க முயலும் மருத்துவர்க்கும் காலரா வரவேண்டுமா என்ன? கொடியவர்களை ஒறுக்கும் (தண்டிக்கும்) நீதிபதிகளும் அரசர்களும் தாங்களும் அத்தகைய ஒறுப்புகளைப் (தண்டனைகளை)பெற வேண்டுமா என்ன? சேயின் நோயைப் போக்க, அச்சேய்க்குப் பால் கொடுக்கும் தாய் தானும் பத்தியம் பிடிக்கிறாள். தாயின் பாலைக் குடிக்கும் சேய்போல, மக்கள் கடவுளின் பாலைக் குடிக்கிறார்களா என்ன ? சேய்க்குத் தன் மார்பகத்துப் பாலை ஊட்டாத தாய் சேய்க்காகப் பத்தியம் பிடிப்பதில்லையே. இன்னும் கேட்டால், தாய்மார்கள் சிலர், தம் நோய்கள் குழந்தைகளுக்குத் தொற்றாமல் இருப்பதற்காகப் பாலை மறக்கடித்துவிட்டுத் தாங்கள் பத்தியம் பிடிக்காமல் இருக்கின்றார்களே ! எனவே, மக்களின் துன்பத்தைப் போக்குவதற்காகக் கடவுள் தாமும் அவர்களைப்போலவே துன்பப்படுகிறார் என்று கூறுவது, பொறுப்பற்ற-பகுத்தறிவற்ற மடமைப் பேச்சு - ஏமாற்றுப் பேச்சு என்பது எளிதில் புலப்படும். மக்களுக்காக மக்களாய்ப் பிறந்து துன்புறும் கடவுள் மற்ற உயிரிகளுக்காக என்ன செய்கிறார்?-ஏதாவது செய்கிறாரா? மற்ற அஃறிணை உயிரிகளைப்போன்ற உருவங்களுடன் அவற்றிடையே பிறந்து, அவற்றிடையே வாழ்ந்து அவற்றுக்காகத் துன்புறுகிறாரா?-என்பது ஈண்டு எண்ணத்தக்கது.