பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
 


மாட்டார்கள். எனவே, மக்களினம் தோன்றி நெடுங்காலம் சென்றபிறகு இடையிலே கண்டுபிடிக்கப்பட்ட சரக்கே கடவுள் என்பது. நாள் ஆக ஆகக் கடவுளுக்குக் கண்-காது-மூக்கு முதலியவை வைக்கப்பட்டன; கடவுள் பெயரால் கட்டுக் கதைகள் பல பெருகின; மூட நம்பிக்கைகள் முகிழ்த்தன; அதனால் எவ்வளவோ சடங்குகள் புற்றீசல்கள் போல் தோன்றின; இவற்றை அப்படியே பின்பற்றுபவர்கள் ஆத்திகர் எனப்பட்டனர். வேண்டாத இந்தச் சுமையை வெறுத்து ஒதுக்குபவர்கள் நாத்திகர் எனப்பட்டனர்.


நாத்திக வாதம்

கடவுள் என ஒருவர் இருப்பின் அவர் தனி உருவத்துடன் வெளியில் வரலாமே! வெளிப்படையாகக் காட்சியளிக்கலாமே! மறைந்து இருப்பதன் மர்மம்’ என்ன? அவரைக் காண மக்கள் ஏன் எவ்வளவோ தொல்லைப் பட வேண்டும் - துன்பப்பட வேண்டும்? தொல்லைப்பட்டும் காண முடிந்ததா-முடிகிறதா? யார் யாரோ எங்கே எங்கேயோ கண்டதாகக் கூறியுள்ளார்களே!இப்போதும் சிலர் கடவுளைக் காண்பதாகக் கூறுகின்றார்களே! இவர்கள் எல்லாம் என்ன கண்டனர்-என்ன காண்கின்றனர்? கடவுள் எப்படி இருந்தாராம்- - இருக்கிறாராம்? அவர் என்ன கூறினாராம்- கூறுகிறாராம்? கடவுளைக் காணாதவரினும் கண்டவர்கள் தனிச்சிறப்பான பயனாக என்னபெற்றனர்? கண்டவர்கள் ஏதேனும் பயன் பெற்றிருப்பின், காணாதவர்களும் அப்பயனைப் பெறும்படி கடவுள் எளிமையாக வெளிவந்து எல்லாருக்கும் காட்சி தந்து அருள் புரியலாமே! இவ்வாறு செய்வதனால் அவருக்கு என்ன குறைந்து போகும்? கடவுள் இருப்பது உண்மையானால் அவர் எல்லாருக்கும் காட்சி தந்து அருள் புரிவாரே! அவ்வாறு