பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51
 


எனவே, காரண காரிய (Logical) வாதத்தின்படி நுணுகி நோக்குங்கால், யாதோ ஒர் ஆற்றல் இன்றி யாரோ ஒருவர் இன்றி, உலகங்களும் உயிர்களும் தோன்றி யிருக்க முடியாது. யதோ ஒர் ஆற்றல் எனில், அந்த ஆற்றல்தான் கடவுள் ஆகும். எனவே, கடவுள் என ஒரு பொருள் உண்டு என்பது உறுதி-இவ்வாறாக, இன்னும் பலவாறாக, ஆத்திக வாதம் பேசப்பட்டுப் பீடு நடை போடுகிறது.


ஆத்திகமா-நாத்திகமா?

ஆத்திகம் நாத்திகம் என்னும் இரு கொள்கைகளுள் எது சரியானது எனத் தீர்வு காண வேண்டும். நாத்திகர் வினவும் வினாக்கட்கு உண்மையில் ஆத்திகர்கள் நேரான -சரியான பதில் கூறவியலாது. ஏதாவது சுற்றி வளைத்துப் பேசிச் சரிகட்ட முயலலாம்-அவ்வளவுதான்! கடவுள் என ஒன்று இருப்பது உண்மையாயின், கண்ணாலேயோ மற்ற பொறி புலன்களாலேயோ அறிய முடியா திருப்பதேன்? முதலில் இந்த ஒரு கேள்விக்கு நேராகப் பதில் கூற முடியுமா? காற்று என்பது கண்ணுக்குத் தெரியவில்லை; ஆனால் அஃது உடம்பில் உற்று உரசி அறியப்படுகிறது. இனிப்பு என்னும் சுவை கண்ணுக்குத் தெரியவில்லை. அது வாயால்-நாக்கால் சுவைத்து அறியப்படுகிறது.


மணம் (வாசனை) கண்ணுக்குப் புலப்படவில்லை தான்; ஆனால் அது மூக்கால்-மோந்து இழுத்து உணரப்படுகிறது. ஒலி (ஒசை) கண்ணுக்குத் தோன்றவில்லை தான்; ஆனால் அது காதால் கேட்டு அறியப்படுகிறது. இவை போலக் கடவுள் எந்தப் பொறி புலனாலாவது அறியப்படுகிறாரா? முதலில் இந்த வினாவுக்கு விடை வேண்டும்-விடை வராது-விடை இல்லை.