பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


கொண்டே போனால் விடை கிடையாது. கடவுள் தாமாக உண்டானார்; அவர் தோன்றுவதற்கு மூல காரணம் எதுவும் கிடையாது; எதுவும் தேவையில்லை; கடவுள் ஆதி அந்தம் இல்லாத-தோற்றமும் ஒடுக்கமும் இல்லாத அனாதிப் பொருள் என்ற விடையையே ஆத்திகர்கள் திரும்பத் திரும்பத் திரும்பக் கூறுவர். அங்ஙனமாயின்-கடவுளுக்கு மூல காரணம் தேவையில்லையெனில், உலகங்களும் உயிர்களும் மூலகாரணம் இன்றித் தாமாகத் தோன்றின என்று ஏன் கூறக்கூடாது-ஏன் நம்பக் கூடாது? எனவே, காரண காரிய வாதத்தின்படிகருத்தளவையாம் அனுமானப் பிரமாணத்தின்படி கடவுள் உண்மையை நிலைநாட்டிவிட முடியாது.


உலகில் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு-ஆண்டுக்கு ஆண்டு-நாளுக்கு நாள்-புதிய பொருள்கள் பல அறிவியலாரால் கண்டுபிடிக்கப்படுகின்றன; முற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அறியாத பொருள்கள் பல, இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுப் பலராலும் அறியப்படுகின்றன. இயற்கையில் மறைந்திருக்கும் (இரகசியமாயிருக்கும்) உண்மைகள்-உட்பொருள்கள் அறிவியலாரால் கண்டு பிடிக்கப்பட்டு வெளிக் கொணரப படுகின்றன; இவை, கண்-ஒளி முதலான பொறி புலன்களால் உணரவும் படுகின்றன, அங்ஙனம் இருக்க, கடவுள் என்னும் பொருள் மடடும் பொறிபுலன்களுக்குத் தெரியும்படி கண்டுபிடிக்கப்பட்டு வெளிக்கொணரப்படாதது ஏன்? விஞ்ஞானிகளால் இயலாவிடினும் மெய்ஞ்ஞானிகளாவது இதைச் செய்தார்களா? வித்தை காட்டுபவன் ஒரு கூடையைக் கவிழ்த்து வைத்து விட்டு, என்னவோ உள்ளே இருக்கிறது-இருக்கிறது என்று ஏய்த்துக் கொண்டிருப்பான்; அது போலே, கடவுள் இருக்கிறார் இருக்கிறார் என்று வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கடவுள் இதோ இருக்கிறார்-இன்ன வித