பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


போல - அஃதாவது - பொன் ஒன்றே பலவகை அணிகலன்களாக ஆகியிருப்பது போல, கடவுள் ஒருவரே எல்லா உயிர்களுமாக ஆகியுள்ளார். கடவுளே உயிர் - உயிரே கடவுள். “அஹம் ப்ரம்ஹாஸ்மி” என்பது, அத்வைதிகளின் உரைகளுள் ஒன்றாகும். இதன் பொருள், ‘நானே கடவுள்’ என்பதாகும். நானே என்பது உயிர் தன்னையே (Self) குறிப்பதாகக் கொள்ள வேண்டும். அகம் (அஹம்) என்ற சம்சுகிருதச் சொல்லுக்கு நான் என்ற பொருள் உண்டு.


எனவே, கடவுளும் உயிரும் வேறு வேறு இல்லை - ஒன்றே, என்பது அத்வைதக் கொள்கை. இதற்கு ‘ஏக ஆன்ம வாதம்’ என்ற பெயரும் உண்டு. கடவுள் என ஒருவர் தனியே உயிர்களைப் படைத்துக் கொண்டிருக்கவில்லை; கடவுளே உயிர்கள்-உயிர்களே கடவுள் - என்னும் அளவில் அத்வைதக் கொள்கை போய்க் கொண்டிருப்பதால், இதனை ஒரு வகை நாத்திகம்” எனச் சிலர் நவில்கின்றனர். எனவே, கவுதமப் புத்தரின் கொள்கையும், ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையும் நாத்திகச் சார்புடையவை என்பது ஒருவகைக் கருத்து.


புத்தர் கொள்கையும் சங்கரர் கொள்கையும் ஒரு வகையில் சீர்திருத்தக் கொள்கைகளாகக் காணப்படினும், அவ்விருவரையும் பின்பற்றுபவர்கள், பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாய், அக்கொள்கைகளுக்குக் கண்-மூக்கு-காது எல்லாம் வைத்துப் பல வகையான பழைய மூட நம்பிக்கைப் பழக்கவழக்கங்களாம் பாழ்ங்கிணற்றிலேயே விழுந்து கிடக்கின்றனர்; அக்கொள்கைகளின் அடிப்படை உண்மையைக் காற்றில் பறக்கவிட்டனர்; இதனால் யாது பயன்?