பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


முப்பொருள் உண்மை

இதன் தொடர்பாக ஈண்டு சைவ சித்தாந்த சமயத்தின் முப்பொருள் உண்மைக் கொள்கையும் சிந்திக்கத் தக்கதாகும். முப்பொருள் என்பன, கடவுள், உயிர், உலகம் ஆகும். இவற்றை முறையே பதி, பசு, பாசம் என வடமொழியில் கூறுவர். கடவுளைப் போலவே உயிரும் உலகமும் அனாதியாகும். அனாதி என்றால், தான் தோன்றுவதற்கு வேறொரு மூல காரணம் இல்லாதது- அஃதாவது-தானே தோன்றியது என்று பொருளாகும். இம்மூன்றுமே காலம் கணக்கிட்டுச் சொல்ல முடியாத ஏதோ ஒரு காலத்தில் ஒரே சமயத்தில் தோன்றியவையாகும். மூன்றுமே என்றும் அழியாமல் நிலைத்தனவாகும். உலகமாகிய பாசத்தினின்றும் விடுபட்டு, பசுவாகிய உயிர், பதியாகிய கடவுளை அடைய வேண்டும்.


செம்பில் களிம்பு போலப் பாசம் பசுவைப் பற்றிக் கொண்டிருக்கும்; அப்பாசத்தினின்றும் விடுபட்டுப் பசுவானது பதியை அடைந்துவிடின், வறுத்த நெல் மீண்டும் முளைக்காதது போலப் பசுவாகிய உயிர் மீண்டும் பாசமாகிய உலகத்தில் பிறக்காது; இந்த நிலைதான் வீடு பேறு (மோட்சம்) ஆகும்-என்பது சை சித்தாந்த சமயக் கருத்து.


இந்த முப்பொருள் உண்மைக் கொள்கை நமது ஆய்வுக்கு மிகவும் உதவுகிறது. கடவுள் உயிர்களையும் படைக்கவில்லை என்பது இக்கொள்கையால் புலனாகிறது. கடவுள் தோன்றியபோதே உயிர்களும் உலகங்களும் தோன்றி அனாதிகளாய் இருந்தனவாம். இதனைத் திருமூலர் அருளிய திருமந்திரம் என்னும் நூலில் உள்ள