பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
83
 


குறிப்பிட்ட ஒரு தூண்டல்-துலங்கல் தொடர்பான செயல் முழுவதும் ஒரு மறிவினை அலகு” (Reflex Unit) ஆகும். இவ்வாறு பல அலகுகள் உள்ளன. இத்தகைய தூண்டல்- துலங்கல் செயல்களின் தொகுப்பே உளம் (மனம்) ஆகும் என்பது இக்கால உளவியல் கொள்கை. எனவே, ஒரு வகை உடல் இயக்கச் செயல்பாடே-குறிப்பாக மூளை இயக்கமே மனம் என உணரப்படுகிறது. இக்கொள்கை மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

இங்கே ஒரு சாராரின் மாறுபட்ட கருத்து ஒன்றுக்குப் பதில் தர வேண்டியுள்ளது. அஃதாவது:

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாகச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல நுகர்ச்சி மூளையால் நடைபெறுகிறது. என்பது உண்மை; ஆனால் மனத்தின் ஈடுபாடு இன்றி இந்நுகர்ச்சி நடைபெற முடியாது. நாம் தேடிக்கொண்டு போகும் ஒருவர் எதிரே வருவதை நம் கண் பார்த்தா லும், மனம் வேறொன்றில் நாட்டம் கொண்டிருந்தால் வருபவரை நாம் இனம் கண்டுகொள்ள முடியாது; இது போலவே, நாம் இருக்கும் இடத்தில் திடீரெனக் கெட்ட நாற்றம் வீசினும், மனம் வேறொன்றில் ஈடுபட்டிருப்பின் கெட்ட நாற்றம் நமக்குப் புலப்படாது-நாம் அங்கேயே இருப்போம். நம்மிடம் ஒருவர் ஏதாவது சொல்லுங்கால், மனம் ஈடுபடாவிடின் அவர் சொன்னது: கேட்காது-புரியாது. உண்ணுங்கால் மனம் வேறொன்றில் ஈடுபட்டிருப்பின் சுவை தெரியாது. மனம் வன்மையாக வேறொன்றில் நாட்டம் கொண்டிருப்பின், உடம்பில் எறும்பு கடித்தாலும் தெரியாது. இச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கின், மனம் என்னும்,