பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


களால் உணரப்படாமையால் விண்’ என்னும் ஒரு பொருளை ஒத்துக் கொள்ளாமல் மற்ற நான்கு பொருள் களை மட்டுமே ஒத்துக்கொள்கின்றனர். ஆயினும், மற்ற நான்கு பொருள்களும் இருக்கும் வெற்றிடத்தை ‘விண்’ என்னும் ஒரு பொருளாகக் கொண்டு, மூலப் பொருள்கள் (Elements) ஐந்து என்றே சொல்லலாம். சில கோள்களில் இந்த ஐந்து பொருள்களும் உள்ளன எனக் கூற முடியாது. இப்போது (1888 வரை) அறிந்துள்ள அறிவியல் ஆராய்ச்சியின்படி, நிலாவில் (சந்திரனில்) காற்றும் தண்ணிரும் இல்லையல்லவா? ஞாயிறு போன்ற நெருப்புக் கோளங்களில் தண்ணீர் என்னும் தனிப் பொருள் பற்றி நினைக்கவே வேண்டியதில்லை. விண் வெளியில் பொறிபுலன்கள் உணரும்படியாக உள்ள பல் வேறு உலகப் பகுதிகளுள் சிலவற்றில் காற்று தீ, நீர், மண் ஆகிய நான்கு பொருள்களும் இருக்கலாம்; சிலவற்றில், இந்நான்கு பொருள்களுள் சில குறைந்தும் இருக்கலாம்.

மக்களாகிய நம் உடம்பும் சரி-அஃறிணைகளின் உடம்பும் சரி-இந்த ஐம்பொருள்களால் (பஞ்ச பூதங்களால்) ஆனவையேயாகும். உடம்பைப் பஞ்ச பூத பரிணாம சரீரம்’ என சம்சு கிருத மொழியில் கூறுவர் இதனை ஐம்பொருள் திரிபு உடல்’ எனத் தமிழில் வழங்கலாம். இதற்குச் சிறிது விளக்கம் தேவை அரிசியும் வெல்லமும் திரிந்து பண்ணியம் (பணியாரம்)என்னும் தின்பண்டமாக மாறுகின்றன. சோறு, உப்புமா,இட்டலி, தோசை, அப்பம், கொழுக்கட்டை, பிட்டு முதலிய உணவுப்பொருள்கள் அரிசியின் திரிபே (பரிணாமமே) ஆகும். பரிணாமம் என்றால், ஒன்று திரிந்து மற்றொன் றாக ஆவதாகும். இவ்வாறே, ஐம்பொருள்களும் (பஞ்ச பூதங்களும்) திரிந்து உடம்பாக மாறின. அதனாலேயே உடம்பு ஐம்பொருள் திரிபு (பஞ்ச பூத பரிணாம சரீரம், எனப்படுகின்றது.