பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


“நந்த வனத்தில் ஓர் ஆண்டி-அவன்
     நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-அதைக்
     கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி”

(நால்+ஆறு மாதம் = பத்து மாதக் கரு)

என்பன சித்தர் பாடல் பகுதிகள். மண், புனல் (நீர்), காற்று என்னும் மூலப் பொருள்களின் பரிணாமமே உடம்பு என்னும் குறிப்பு, இப்பாடல் பகுதிகளில் பொதிந்து கிடக்கிதது.

உலகமும் உடம்பும்

ஈண்டு, “அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்” - என்னும் முதுமொழி எண்ணத் தக்கது. அண்டம் என்றால் உலகம்; பிண்டம் என்றால் உடம்பு. உலகத்தில் உள்ள- உலகமாக உள்ள ஐந்து முதற் பொருள்களுமே (பஞ்ச பூதங்களுமே) உடம்பிலும் உள்ளன, என்பது இம். முதுமொழியின் கருத்தாகும். இதை நிறுவும் வகையில் உள்ள சம்சுகிருதப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. காதல் முற்றி முதிர்ந்து சாதல் கட்டத்துக்கு வந்துவிட்ட ஒருவன் கூறியதாக உள்ளது அந்தப் பாடல். ஈண்டு அதன் கருத்து வருமாறு:-

“யான் என் காதலியைப் பெறுவதற்கு முன்பே இறந்து போவேனே யாயின், என் உடம்பில் உள்ள ஐந்து முதற் பொருள்களும் அவள் வாழும் இடத்தில் உள்ள ஐந்து முதற் பொருள்களோடு கலந்து போவன வாகுக! என் உடம்பில் உள்ள விண் பகுதி, அவள் வாழும் இடத்தில் உள்ள விண்வெளியோடு கலப்பதாகுக! என் உடலுக்குள் உலவும் காற்றுப் பகுதி, அவள் வாழும் இடத்தில் வீசும் காற்றோடு கலப்பதாகுக! என். உடம்பின் நெருப்புப் பகுதி, அவள் பார்க்கும் முகக் கண்ணாடி ஒளி