பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


சமயம்ஒர் அபின்; அறிவை மயங்க வைத்துச்
சாய்க்கின்ற மதுப்பள்ளம்; அதனுள் மக்கள்
தமதுரிமை அத்தனையும் தள்ளி விட்டுத்
தாங்களும்வீழ் கின்றார்கள்; ஆனால் இன்று
நமதருமைத் தோழரெல்லாம் விழித்துக் கொண்டார்.
நரைத்தாடிக் குருமார்க்குச் சொர்க்கத் தோடு
சமயத்தை விட்டுவிட்டார்; இங்கி ருக்கும்
சமதரும உலகத்தைத் தாமே கொண்டார்.


எந்தஒரு சமயத்தைத் தழுவு தற்கும்,
எம்மதமும் சம்மதமே என்ப தற்கும்
சொந்தமதம் எனக்கெதுவும் இல்லை யென்று
சொல்லுகின்ற நாத்திகனாய் வாழ்வ தற்கும்,
இந்தமண்ணில் எல்லார்க்கும் உரிமை வேண்டும்.
எழுச்சிமிக்க பாட்டாளி மக்கள் கட்சி
சொந்தச்சிந் தனைக்கார நாத்தி கர்கள்
சூழ்ந்திருக்கும் பாசறையாய் விளங்க வேண்டும்.


அரசாங்கப் பதிவேட்டில் மக்கள் பேரை
அடுத்துவரும் மதக்குறிப்பு யாவும், சற்றும்
இரக்கமின்றி எடுத்தெறியப் படுதல் வேண்டும்.
இந்நாட்டுப் பொதுப்பணத்தைக் கோவி லுக்கும்,
குருக்களுக்கும் மானியமாய் அன்பளிப்பாய்க்
கொடுக்கின்ற பகற்கொள்ளை ஒழிய வேண்டும்.
குருத்திளைஞர் பள்ளிகளை மடமை விற்கும்
குருக்களிட மிருந்தின்றே மீட்க வேண்டும்.