பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடந்தூக்கும் குங்குமப்பூ

ரும்பாக இருந்த சகுந்தலையின் உள்ளம் துஷ்யந்தனால் அவிழ்மலராகிறது. சிப்பிச் சகுந்தலை தன் முத்து வயிற்றுடன் காதலனைக் காணச் செல்லுகிறாள் ஏற்றுக்கொள்வான் என்ற இன்ப நினைவோடு. அரியணைக் காதலன் சூழ்நிலையால் அறியாக் காதலன் ஆகிறான். பெளரவ மன்னனால் கெளரவம் இழந்த அக்காட்டு மலர் வடித்த கண்ணீர்த் தேன் இக்கவிதை.

கைப்பிடித்த காதலரே . . வேண்டாம் ! கொண்ட
கடிமணத்தில் தங்களுக்கே ஐய மென்றால்
இப்படிநான் அழைப்பதினிப் பொருத்த மில்லை.
இந்நாட்டுப் பெளரவரே ! எனது கற்பைக்
குப்புறத்தள் ளுதல்முறையா ? அலகை வெட்டிக்
குறைத்துவிட்டால் கோழிக்கு வாழ்க்கை ஏது ?
தப்பேதும் அறியாத என்னை முள்ளில்
தள்ளுகின்றீர் , மானத்தைக் கிள்ளு கின்றீர்.

அணைப்பதற்கும் என்னுடம்பில் மொய்ப்ப தற்கும்
அச்சார மாய்நீங்கள் அன்று தந்த
கணையாழி என்னிடத்தில் இல்லை ; இந்தக்
கண்ணிரண்டும் காட்டாத உறவைக் கையில்
புணருகின்ற மோதிரமா காட்டும் ? என்றன்
பொன்னுடம்புப் பூட்டுக்கு மேலாய், வேறு
மணமொன்று தேவையுண்டா ? வண்டும் பூவும்
மணப்பதில்லை என்றீரே ! மறந்தா போனீர்?