பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


எத்தனை பேர் மார்புக்குள் போய்வந் தாலும்
என்கத்தி உறைக்குள்தான் உறங்கும் ; காதல்
பத்தினிமார் எத்தனைபேர் இருந்தால் என்ன?
பட்டத்துக் குரியவள் நீ ! வீடி ருக்கச்
சத்திரத்தில் நிலையாகத் தங்கு வேனா?
சஞ்சலமேன்? என்றதெல்லாம் மறந்தீர் ; காமன்
குத்துக்கள் தைத்ததனால் சிலந்தி நெய்த
கூடானேன் : மீண்டும்நீர் குத்த லாமா?

தலையிறக்கும் கருவிழுதுக் கூந்தல் என்றன்
தாள்வரையில் தொங்கியதால், வண்ட தைத்தன்
குலமென்று கருதியது ; தொடர்ந்து வந்து
கூடுதற்குத் துரத்தியது ; வண்டு செய்த
சலசலப்பைப் பயன்படுத்தி நினைத்த வற்றைச்
சாதித்துத் திரும்பிவிட்டீர் ; பருவ கால
விளையாட்டின் விளைவாலே கொடியு டம்பு
வீணையுடம் பாகியதால் விரைந்து வந்தேன்.

நிறக்குடும்ப மழைவில்லை எட்டி விட்ட
நினைப்போடு நான்வந்தேன் ; இனிமேல் வானில்
பறப்பதற்கு முடியாமல் சிறகு வெட்டப்
பட்டமயில் ஆகிவிட்டேன் ; நெஞ்சிற் காதல்
திறப்புவிழாச் செய்தவரே! இனிக்கும் அந்தத்
தேன் நினைவில் நான்சாகத் தயங்க மாட்டேன்.
பிறக்கின்ற என்குழந்தை தன்னை எண்ணிப்
பேதலித்து நிற்கின்றேன் ; மயங்கு கின்றேன்.