பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13



கடைத்தெருவில் கன்னமிட்ட பொருளை அந்தக்
கள்வனுக்கே பரிசாகக் கொடுப்ப தைப்போல்
சடைத்துறவி என் தந்தை என்னை யிந்தச்
சதிக்கிடங்கிற் கனுப்பிவைத்தார் ; கற்பின்மீது
படையெடுப்பு நடத்துகின்ற மன்னா! உன்றன்
பஞ்சணையும் இனியெனக்குப் பாம்புப் புற்றே!
நடை தடுக்கி விழுந்தாலும், இனியுன் கையில்
நான் தடுக்கி ஒருபோதும் வீழ மாட்டேன்.

கொடிப்பழக்கம் கொண்டவள்தான்; மலர்ச் சிரிப்புக்
கொடியவனுன் பழக்கத்தால் கெட்டேன் ; உன்றன்
மடிப்பழக்கம் என்றென்றும் நிலைக்கும் என்று
மானத்தைப் பறிகொடுத்த மங்கை யானேன்.
குடிப்பழக்கம் கொண்டவர்கள் தெளிந்த பின்பு,
கூறியதை மறப்பார்கள் ; அவர்போல் என்றன்
இடைப்பழக்கம் நடைப்பழக்கம், மதுப்பி சையும்
இதழ்ப்பழக்கம் எல்லாமே மறந்து போனாய் !

வீக்கத்தைச் சதைவளர்ச்சி என்று நம்பி
வீணானேன் ; அரசாங்க வைரக் கத்தி
தாக்காது காதலியை எனநினைந்து
தரங்கெட்டேன் ; வித்தாரக் கண்ணி வைக்கும்
வாக்காலே வசமிழந்தேன் ; சிலந்தி யைப்போல்
வாய்ப்பந்தல் போட்டுவிட்டுக் காத்தி ருக்கும்
போக்கிரியால் ஏமாற்றப் பட்டேன் ; வஞ்சப்
பொய்க்குழியில் யானையைப்போல் வீழ்ந்துவிட்டேன்.