பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தொட்டில் துரைத்தனம்.

ராபர்ட் கிரீன் இங்கர்சால் பெரிய நாத்திகர்: அமெரிக்க நாட்டுச் சொல்லேருழவர்; எதிர்க்க முடியாத தன் ஏவுகணைப் பேச்சால் ஆத்திகக் கோட்டையின் கடைக்காலில் அதிர்ச்சி உண்டாக்கியவர். சமயவாதிகள் இவரைச் சைத்தான் என்றனர். பகுத்தறிவுவாதிகள் இவரைப் பகலவன் என்றனர். மேடையில் பேசிய ஒவ்வொரு சொல்லுக்கும் ஓர் அமெரிக்க டாலர் பெற்ற இவர், அமெரிக்க நாட்டு மக்கட் தலைவரைவிட அதிக வருவாயோடு வாழ்ந்தார். பெண்ணுரிமை பற்றி இங்கர்சால் பேசிய பேச்சே இது.

கொக்கிப் பிறைநிலா, குடுமி மலையில்
சிக்கிப் பறக்கும் சேலை அருவிகள்,
மேனிப் பட்டு மான்கள், சிதறிய
வானவில் துண்டு வண்ணத்துப் பூச்சிகள்,
குன்றப் பெருந்தலைக் கொப்புளக் கதிரவன்,
அன்றலர் பூக்கள் ஆகிய வற்றைப்
படைத்துப் படைத்துப் பழகிய கைகளால்
இயற்கை முடித்த ஈடிலாப் பெண்கள்,
மடமை கடவுள் மதம்இவை கட்கே
அடிமைப் பட்டி ஆடவர்க் கடிமைகள் !

மக்கட் சாதியில் மதிப்பும் துய்மையும்
மிக்க நிகழ்ச்சி திருமணம் ஒன்றுதான்.
திருமணம் என்னும் மோதிரப் புணர்ச்சியை
வெறுக்கும் தாடிக் குருக்களைக், கூந்தலை
நறுக்கும் கோயிற் பெண்களை வெறுக்கிறேன்.