பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30



வெற்றித் திருநாள் வேளையில், அந்த
வெற்றியைத் தந்த வீரத் தளபதி
நற்றவன் காந்தி நாயகன் எங்கே ?
எங்கோ நாட்டின் எல்லையில், இனவெறிச்
செங்களம் படர்ந்த சிற்றுார்ப் பாதையில்
அழும்கண் ணீருக்கு அணைபோடு கின்றான்.

செழித்தஇவ் விந்திய மண்ணில், அவனடி
அழுத்திய சுவடுகள் அழியாச் சுவடுகள் !
அலையேறிப் பாயும் கங்கையைப் போல
நிலைபேறு கொண்ட தொண்டவன் தொண்டு !
இனிப்பல நூற்றாண் டேகிய பின்னர்
அருளறம் என்னும் அடிப்படை மீதில்
எழுமுயர் நாக ரிகத்திற் கின்றே
கடைக்கா லிட்ட காந்தித் தலைவனை
நாவாரப் போற்றி நன்றி செலுத்துவோம்.

இந்திய நாட்டின் விடுதலைக் காக
இந்திய ரோடு, வேற்றுநாடிருந்து
வந்தவர் பற்பலர் தந்தஒத் துழைப்பை
எண்ணி நன்றியால் இருகை குவிக்கிறோம்.
எகிப்தியர் சுமேரியர் எனப்பல் இனத்தார்
வகுத்தபண் பாட்டு வளர்ச்சியை இந்தியர்
எட்டிப் பிடித்தனர் என்றபே ருண்மையைப்
புதைபொருள் அகழ்ந்தும் ஆய்வுகள் நடத்தியும்
இருண்டஇந் நாட்டு வரலாற் றேட்டில்
பேரொளி பாய்ச்சிய மேலைநாட்டறிஞர்எம்
பாராட்டுக் குரியவர் ; பாராட்டு கின்றோம்.