பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35



பன்னாட்டார் இந்நாட்டைத் தேடி வந்தோம்
பழமரத்தைத் தேடிவரும் பறவை போல.
தன்னாட்சிப் போர்செய்தோம்; அடிமை வாழ்வைத் தகர்த்தெறிந்தோம்; எல்லாரும் இந்த மண்ணில்
பொன்னாட்டை உருவாக்கப் பாடு பட்டோம்.
புகுந்தவர்கள் பிறப்பாலே ஒப்பர் என்றே
இந்நாட்டில் சட்ட்ங்கள் இயற்றி வைத்தோம் ;
இன்றைக்கு நாமதனை மறந்து விட்டோம்.

காற்செருப்பைச் சாக்கடையில் தள்ளு தல்போல்
கடையரென்று தள்ளுகிறீர் ஓர் கூட்டத்தை!
மேற்குலத்தார் நீங்களென்று சொல்லு கின்றீர்
மேனியின்தோல் வெளுப்பென்ற காரணத்தால்.
காற்றடித்தால் இமைமூடும் கண்ணில், வட்டக்
கருவிழியை மட்டமென்று சொல்ல லாமா ?
வேற்கண்ணார் கருமையென்ற கார ணத்தால்
விளையாடும் கூந்தலினை வெறுத்தா விட்டர்?

கடைகளிலும் விலக்கிவைத்தீர்; புனித மான
கல்லூரி வாயிலுக்குள் விலக்கி வைத்தீர் ;
நடைபாதை தனிற்கூட விலக்கி வைத்தீர் ;
நங்கையர்கள் ஏறிநிற்கும் ஆடரங்கில்
படிக்காட்சிக் கொட்டகையில் விலக்கி வைத்தீர் ;
பசிக்கொடுமை தாளாமல் நுழையும் போது
விடுதிகளில் விலக்கிவைத்தீர் ; மக்கட் பண்பை
விலைகூறி விற்பதற்குத் துணிந்து விட்டீர் !