பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39



நடுங்காத பெரும்புலமை நடத்தி வந்த
நக்கீரன் என்நினைவில் தோன்றிச் சொக்கன்
சுடுங்கண்ணுக் கஞ்சாமல் எதிர்த்து நின்று
சொற்சிலம்பம் ஆடுகின்றான் ; ஆன்ற விந்தே
அடங்கியசொற் பெரும் புலவர் தமிழ்ப்பண் பாட்டுக்
கதிகாரம் வகுக்கின்றார் ; அவர் தமிழ்த்தேன்
குடங்கவிழ்ந்து பெருக்கெடுக்கக் காதி ரண்டும்
குளிர்கின்றேன்; காண்பதற்கு முடியவில்லை.

கலைத்துறையில் படிந்தெழுந்து பட்டந் தாங்கக்
காத்திருக்கும் களிறுகளே ; காப்பி யத்தில்
நிலைத்துவிட்ட நெடுஞ்செழியன் பரணர் பாரி
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி பேசி வந்த
சுளைத்தமிழில் இவ்வுரையை நிகழ்த்து கின்றேன் ;
சொல்லாலே தொடுகின்றேன்; இந்நூற் றாண்டில்
முளைத்துவரும் குருத்தறிஞர் குலமே ! உம்மை !
முத்திருக்கும் மதுரையிலே வரவேற் கின்றேன்.

அரைவட்டத் தாவணியை விரித்துத் தோகை
அழகுமயில் ஆடுவதும், ஒளிப்பழத்தைத்
திருவிளக்கு மூக்காலே சுமந்த வண்ணம்
தெருமுனையில் நிற்பதுவும், பேறுகாலக்
கருமேகம் மருத்துவச்சி துணையில் லாமல்
கனத்தமழை ஈனுவதும், பொன்னைப் பூமிப்
பெருவயிறு தாங்குவதும் தங்க ளுக்கா ?
பிறர்நலத்துக் கென்பதைநீர் உணர்தல் வேண்டும்.