பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

புலி பொறித்து விற்பொறித்துக் கங்கைகொண்ட
புல்லரிக்கும் வரலாற்றைப் படிக்கும் நீங்கள்
எலியாக ஏனிருக்க வேண்டும்? உங்கள்
இணையற்ற திருக்குறள் மேகலை சிலம்பின்
ஒலிமுழக்கம் உலகிலினிக் கேட்க, நாளும்
ஓயாமல் இக்கழகம் முயல வேண்டும்.
கலைவளர்க்கும் கனித்தமிழை, இந்த நாட்டின்
கண்ணியத்தைக் கண்ணிரண்டாய்க் காக்க வேண்டும்.

தட்டைக்காய்க் கொடுக்காலே தாக்கு கின்ற
தமிழ்நாட்டுத் தேள்நஞ்சு குளிர்ந்த தென்றும்
வட்ட மலர் வாயமுதை உதட்டில் தேக்கி
வருகின்ற வண்டுதரும் வெளிநாட்டுத்தேன்
எட்டிக்காய் போன்றதென்றும் சொல்ல லாமா?
இளந்தென்றல் எங்கிருந்து வந்தால் என்ன ?
கிட்டரிய கருத்துக்கள் எந்த நாட்டில்
கிடைத்தாலும் இக்கழகம் ஏற்க வேண்டும்.

கொம்பேறிப் படர்கின்ற கொடிக்குக் கூடக்
கொத்தாக மலர்கின்ற திட்ட முண்டு
நம்பிக்கைக் குரிய பெரும் திட்டத் தோடு
நாட்டிளைஞர் கல்வியினைக் கற்காவிட்டால்
தும்பறுந்த காளைகளாய் ஆவர் ; இந்தத்
துணைக்கண்டம் என்னாகும் ? ஒழுங்கில் லாத
கும்பலுக்குக் களமாகும்; கலக்கு கின்ற
குளமாகும்; ஆர்ப்பாட்டக் கோட்டை யாகும்.

க. தி . 4