பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


பாடமொழி பயிற்றுமொழி பரந்த இந்தப்
பாரதத்தின் இணைப்புமொழி என்ற சொற்கள்
மேடையிலே கேட்கின்றோம்; ஒருமொ ழிக்கு
மேலான தகுதி தாய் மொழியென் கின்ற
பீடுற்ற பெருந்தகுதி யொன்றே. சங்கப்
பெருந்தமிழே ஆட்சிமொழி, உலகில் ஏனை
நாடுகளின் நட்புக்கும் அறிவு வேட்டை
நடத்துதற்கும் ஆங்கிலமே நமக்குப் போதும்.

ஆங்கிலத்தால் நாமடிமை ஆனோம்; சே! சே!
அதுவேண்டாம் என்றுரைப்போர், இங்கி லாந்தில்
வாங்குகின்ற கடனுக்குக் காலம் பார்த்து
வாசலிலே நிற்கின்றார்; எங்கள் இந்தித்
தேங்குழலைத் தின்னுங்குள் என்று வாயில்
திணிக்கின்றார்? தெரியாதா இவர் நினைப்பு?
தீங்குதரும் இத்திட்டம் வேண்டாம் என்று
திரண்டுவரும் மாணவரைப் போற்று கின்றேன்.

தமிழுங்கள் முரசாக, தொன்று தொட்டுத்
தழைத்துவரும் பண்பாடு கவச மாக,
உமதறிவே படைக்கருவி யாக, போற்றும்
ஒழுக்கமொன்றே துணையாகக் கொண்டு வாழ்வீர். இமைப்பொழுதும் ஊக்கத்தைக் கைவிடாமல்
இடர்களைவீர்! தாயகத்தைக் காப்ப தற்குச்
சிமிட்டாத கண்ணுடையர் ஆவீர்! கற்றுச்
சென்றிடுவீர்! வென்றிடுவீர்! வாழ்க நீவிர்!