பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47



கொட்டுமழைக் கூட்டத்தில் அந்நாள், காஞ்சிக்
குளிர்ந்தமழைப் பேச்சறிஞர் குறிப்பிட்டார்கள்
வெட்டிக்கொண் டோடவில்லை : நாங்கள் கொண்ட
வியூகந்தான் புதுக்கட்சி: காலி யாக
விட்டிருக்கும் நாற்காலி என்றும் அந்த
வெண்தாடி வேந்தருக்கே ! ஆனால் எம்மை
எட்டிவந்து நெருங்காதே பகையே ; நாங்கள்
இரண்டுகுழல் துப்பாக்கி! என்று சொன்னார்.

கோழிக்கால் மிதிப்பதனால் வளரு கின்ற
குஞ்சுமுடம் ஆவதில்லை ; யானைக் குட்டி
வேழத்தின் தாக்குதலைப் பெறுவ தெல்லாம்
வீரப்போர்ப் பயிற்சிக்கே ! எருதை விட்டுத்
தாள்மிதிக்கச் சொல்வதெல்லாம் உதிரும் முத்துத்
தானியத்தைப் பெறுவதற்கே ! பெரியார் சொற்கள்
ஆழத்தில் தைத்தாலும் எங்கள் மார்பில்
அத்தனையும் விழுப்புண்ணாய் ஆக்கிக் கொள்வோம்.

கலியாண சுந்தரனார் தலைமை யேற்ற
காஞ்சிபுரக் காங்கிரசில் உறுமி விட்டு
வெளியேறி வந்தஇவர் அக்கட் சிக்கு
வெடிகுண்டாய் மாறிவிட்டார் ; அவர்கள் தந்த
ஒலிபெருக்கி மேடையிலே, கடைக்கால் கல்லை
ஒவ்வொன்றாய்ப் பெயர்த்தெடுத்தார் ; காம ராசர் நிலையைத்தான் ஆதரிப்பேன் என்று சொன்னார் ;
நிச்சயமாய் இதுபெரிய புரட்சி யன்றோ ?