பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


விருதுநகர் மாம்பழத்தை ஆத ரித்து
வேரோடு மாமரத்தைச் சாய்த்த வீரர்
சிறந்தஒரு மாமேதை ; வரலாற் றேட்டில்
சீக்கிரத்தில் கிடைக்காத புரட்சிப் பாடம் ;
கருத்துக்குக் கருவூலம்; தமிழர் இன்று
கண்டெடுத்த பகுத்தறிவுப் பேழை ; சீறி
உருத்தெழுந்து தமிழ்நாட்டு மடத்த னத்தை
உதறிவரும் தன் மானச் சூறைக் காற்று.

பங்காரு பத்தரிடம் கற்றுத் தேர்ந்து
பகுத்தறிவுப் போர்செய்த பாட்டு மல்லன்
தங்கியிருந் தரசாண்ட புதுவை யூரார்
தடித்தனத்தால் குற்றுயிராய் மயங்கி வீழ்ந்தேன்.
எங்கிருந்தோ பிறந்து வந்த பிள்ளை, என்னால்
எலும்பெல்லாம் முறிந்தானே !’ என்று செந்நீர்
பொங்கிவரும் புண்ணுக்கு மருந்து போட்டார் ;
போர்ப்படையில் எனக்குரிய இடத்தைத் தந்தார்.

இருக்கின்ற காலத்தில் இவரைப் போல
இமயமலைப் புகழ்பெற்றோர், இந்த நாட்டின்
அரசியலில் சரியாமல் அறுப தாண்டாய்
ஆதிக்கம் செலுத்தியவர் எவருமில்லை.
உருக்கைப்போல் நெஞ்சுரத்தைப் பெற்ற, இந்த
உந்துவண்டிப் பெருங்குடும்பி வயிற்றின் முன்னால்
செரிக்காத உணவில்லை ; இவர்வாய்ச் சொற்கள்
சிந்தாத பட்டிதொட்டி எங்கு மில்லை.