பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


தூக்கத்தில் உம்மை வந்து
துளியேனும் இரக்க மின்றித்
தாக்கினர் அற்பர்; அந்தத்
தருணத்தில் இருந்தி ருந்தால்
தூக்கிய கைகள் உம்மைத்
தொடவிட் டிருக்க மாட்டேன்.
தாக்கியோர் என்பி ணத்தைத்
தாண்டியே சென்றி ருப்பர்.

கடவுளை மணந்த இந்தக்
கன்னியர் நடுவில் உங்கள்
தடந்தோளை மணந்த தையல்.
தாங்கிய சிலுவைக் கூட்டம்
இடம்பெறும் இடத்தில் காதல்
ஏக்கத்தைத் தாங்கும் கோதை!
மடமெங்கும் கடவுட் சின்னம்!
மனத்திலென் காதற் சின்னம்!

இருவரில் ஒருவ ராக
இருந்தஅந் நாளில், பாரில்
பிரிவென்ப திருப்ப தாகப்
பேதைநான் எண்ண வில்லை.
ஒருமுறை கூட மேனி
ஒதுங்கநீர் விட்ட தில்லை.
எரிந்தபின் னாலும் அன்பே!
என்சாம்பல் காத்தி ருக்கும்.