பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68



புதுப்பிக்க முடியா அந்தப்
பொல்லாத இன்பத் துக்குப்
பதைப்புறு கின்றேன்; பாம்புப்
படுக்கையில் கிடக்கு மிந்தக்
கதுப்புத்தேங் கனியின் வாழ்க்கை
கத்திமேல் தானா? நெஞ்சக்
கொதிப்பாறி அமைதி காணக்
குளிர்புனல் ஓடை யுண்டா?

வயது ஏற ஏற அபெலார்டு-ஹெலாய் காதல், தத்துவக் காதலாக மலர்ந்தது; உள்ளம் ஒய்ந்து, அவர்கள் காதலில் மூளை ஆதிக்கம் பெற்றது. அவர்கள் கூட்டு முயற்சியால் கிறித்தவக் கன்னிமாடப் பெண்களுக்குரிய ஒழுக்க விதிகள் உருப்பெற்றன. தன்னடக்கம், வறுமையை விரும்பி ஏற்றுக்கொள்ளல், அமைதி ஆகிய மூன்றும் அவ்விதிகளின் தலையாய கோட்பாடுகள்.

தன்னுடைய அறுபத்து மூன்றாம் வயதில், (21, ஏப்ரல், 1143) எந்தத் துணையுமின்றி, அன்பு காட்டுவோர் அருகில் யாருமில்லாமல் பீட்டர் அபெலார்டு உயிர் நீத்தான். அவன் உடல் ஹெலாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹேலாய் இறந்தாள். அபெலார்டின் கல்லறைக்கருகில் அவளும் புதைக்கப்பட்டாள். உலகப் புகழ் பெற்ற இக் காதலர்களின் கல்லறைகளைப் பாரீசில் உள்ள பீர் லாசெய்ஸ் (Pere Lachaise) என்னும் இடத்திலுள்ள இடுகாட்டில் இன்றும் காணலாம். அக்கல்லறைகளின் நடுவில் பதிக்கப் பெற்றுள்ள சலவைக் கல்லில் பின் வருமாறு எழுதப்பெற்றுள்ளது: