பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


நானேறும் அரசாங்கக் குதிரை, என்னை
நடுவழியில் தள்ளியென்மேல் சிலநாள் ஏறும்,
வானேறும் பெரும்புகழும் வைரத்தங்க
மணிமுடியும் அப்போது சுமையாய்த் தோன்றும்.
‘நான்’ என்ற எண்ணத்தை ஒதுக்கி, உள்ளம்
‘நாம்’ ஆக அப்போது துடிது டிக்கும்.
தேனிலவே ! இந்நேரம் அந்த நேரம் !
தெருக்கதவும் உனக்காகத் திறந்தி ருக்கும்.


அரசாங்கப் பீரங்கி வயிற்றுக் குள்ளே
அடைபட்டுக் கிடக்கின்றேன் ; உன் மடிக்கு
விரைந்துவர விருப்பந்தான் ! ஒசையின்றி
வெடிக்காமல் வெளிவருமா அரசுக் குண்டு?
பரிவாரம் தளபதிகள் என்றெனக்குப்
படாடோபத் தடையுண்டு. தென்றல் காற்றுக்(கு)
ஒருதடையும் இங்கிருப்போர் விதிக்க மாட்டார்;
ஒடிவரத் தடையென்ன? விடைதான் என்ன?


என்நண்பன் டூராக்கின் துணையி னாலே
எளிதாகும் உன்வேலை; உன்கண் செய்த
புண்ணுக்கு வேறொருவர் மருந்தெடுத்துப்
பூசுவதால் தீராது. விரும்பி வந்தால்
உன்விருப்பம் அத்தனைக்கும் அதிகா ரத்தால்
உருக்கொடுப்பேன்; உன்னையும்நான் உயர்த்தி வைப்பேன். கண்விருப்பம் காட்டிப்பார்! உனது நாட்டுக்
கவலைகளை ஒருநொடியில் தீர்த்து வைப்பேன்.