பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடை திறப்பு

முல்லையின் திருமணம். அந்த மங்கல நாளில் தன் ஆருயிர்த் தோழி மேகலையை எதிர் பார்க்கிறாள். ஆனால் அவள் வாழ்த்துத்தான் வந்து சேர்கிறது; வாழ்க்கையின் இளவேனிலாக வந்திருக்கு ம் அத் திருமண நாளில், தன் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சி அலைகளை ஒளிக்காமல் தேன் தமிழில் தீட்டி, உள்ளங்கலந்து பழகிய தோழி மேகலைக்கு அனுப்பிவைக்கிறாள்.


சொட்டுகின்ற நீர்த்துளிபோல் உருவங் கொண்ட
சுடுவெய்யில் ஈழத்தில் இருக்கும், பட்டுக்
கட்டுடம்பு மேகலையே! உடன்ப யின்ற
கனிப்பேச்சுக் கல்லூரிக் கட்டில் தோழி!
கட்டுமரம் ஆகிவிட்டேன்; அலையில் லாத
கடல்மீது நடக்கிறது தோணி யோட்டம்!
கொட்டுமுழக் கோடெனக்குப் பெற்றோர், காதற்
கூட்டுறவுக் கடைதிறப்பு நிகழ்த்தி விட்டார்.


பட்டாடை சரசரக்கச்,காட்டைப் பின்னல்
படநாகக் கூந்தல்பூக் காடு தாக்க,
எட்டடிக்கண் ணாடியின்முன் அன்று நின்றே
என்னழகைக் கண்டவுடன், திரும ணத்தின்
கட்டாயம் என்னவென்று புரிந்து கொண்டேன்!
கண்சிரிப்புத் தோழியர்கள் என்னும் காதற்
பட்டாள அணிவகுப்புத் தொடரச் சாயல்
பார்வையில் அடியெடுத்து நடந்து சென்றேன்.